

புதுடெல்லி,
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பேசப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் சுகேஷ் சந்திரசேகர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு பண மோசடி வழக்கில் தொடர்பு உடையவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி மண்டோலி சிறையில் இருக்கிறார். இவர்தான் மோசடி செய்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்துள்ளார். குறிப்பாக நடிகைகளிடம் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார். மிக விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து உள்ளார்.
இதில் சுகேஷ் சந்திரசேகருடன் மிகவும் நெருக்கமானவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இருவருக்குள்ளும் நெருக்கமான காதல் இருந்ததாக சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். மேற்படி மோசடி வழக்கு விசாரணையில் இருவருக்குமான தொடர்பு பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு காதலர் தினத்தையொட்டி ரூ.30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர் ஒன்றை பரிசளித்ததாக தெரியவந்துள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.
அவர் ஜாக்குலினுக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட கடிதம் எழுதி உள்ளார் அது வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில், "காதலர் தினத்தின் மென்மையான ஒளியில் உலகம் குளிக்கும்போது, நீ என் அருகில் இல்லாமல் அது முழுமையடையாது என உணர்கிறேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு என் இதயம் வலிக்கிறது. என்னுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பும் இன்று உன் பெயரைக் கொண்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் ராணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது" என அவர் கூறியுள்ளார்.