

பின்னணி பாடகர்கள் சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜோடிக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநிஷா.அதேபோல் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாம் விஷால்.
தனது 7 வயதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த ஸ்ரீநிஷா தனது தனித்துவமான குரலின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் போட்டியின் அரையிறுதியில் எலிமினேட் செய்யப்பட்ட அவர், இசைத்துறையில் தனது பயணத்தை தொடர்ந்தார்.
2014-ம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரு மலையோரம்’ என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஸ்ரீநிஷா, அதன்பிறகு இளையராஜா இசையில் ‘அம்மா கணக்கு’, சந்தோஷ் நாராயணன் இசையில் ‘காதலும் கடந்து போகும்’, ஹிப் ஹாப் தமிழ இசையில் ‘இமைக்கா நொடிகள்’, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘99 சாங்ஸ்’, இமான் இசையில், ‘லாபம்’ உள்ளிட்ட பலர் இசையில் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். பல பாடல்களைப் பாடி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, சொந்தமாகப் பாடல்களை எழுதி, இசையமைத்து வெளியிடும் சுயாதீன பாடகராகவும் இருந்து வருகிறார் சாம் விஷால். இவர் அனிருத்தின் இசையில் மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு மொழிப் பாடலான ‘சிட்டி ஸ்டோரி’ பாடலைப் பாடி சினிமாவில் அறிமுகமானார்.
சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா இருவரும் இணைந்து பல்வேறு இசைக்கச்சேரிகளில் பாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் தற்போது வாழ்க்கையிலும் ஒன்றாக இணைய உள்ளனர்.
இந்த நிலையில், இவர்களின் நட்பு காதலாக மாறி, திருமணத்தில் முடிந்துள்ளது. இவர்களுக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீநிஷா, விஷ் மோட் 11:11 என்று பதிவிட்டுள்ளார்.
சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜோடிக்கு சினிமா பிரபலங்கள், இசை ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.