ரூ. 200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கோர்ட்டு

மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினர்.
சென்னை,
தொழிலதிபர்களிடம் 200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக் கோரிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்களை மிரட்டி 200 கோடி ரூபாய் பறித்ததாகவும், இதன் மூலம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலையுயர்ந்த பரிசுபொருள்களை அன்பளிப்பாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் ஏற்கெனவே திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதை ரத்து செய்ய கோரி ஜாக்குலின் தொடர்ந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஏ.ஜி. மசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தினர்.






