“ஜெயிலர் 2” பட அனுபவம் பகிர்ந்த சுராஜ் வெஞ்சரமூடு

உண்மையிலேயே ரஜினி ஒரு மேஜிசியன்தான் என்று சுராஜ் வெஞ்சரமுடு கூறியுள்ளார்.
“ஜெயிலர் 2” பட அனுபவம் பகிர்ந்த சுராஜ் வெஞ்சரமூடு
Published on

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மட்டும் பாக்கியிருக்கிறது. இதில் ரஜினியுடன் இணைந்து முதன்முறையாக நடித்துள்ளார் சுராஜ்வெஞ்சரமூடு. தற்போது ‘யூத்’ படத்தில் கென் கருணாஸுக்கு அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘யூத்’ படத்தினை விளம்பரப்படுத்த சுராஜ் வெஞ்சரமூடு பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அப்பேட்டியில், “‘ஜெயிலர் 2’ படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. முதல் பாகத்தினை ஒப்பிடும் போது, இரண்டாம் பாகம் இன்னும் அற்புதமாக இருக்கும்.ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்தது கூட இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஆச்சரியப்பட வைப்பார். உண்மையிலேயே அவர் ஒரு மேஜிசியன்தான். தமிழில் ‘யூத்’, ‘கரா’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன்” என்று சுராஜ் வெஞ்சரமுடு தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து பேசிய அவர், “தனுஷ் சார் ஸ்டார் நடிகர். அவர் ஒருபக்கம் கமர்ஷியல் திரைப்படங்களும், மறுபக்கம் மரியான் மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்களிலும் நடிக்கிறார். அவர் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார்” என்றார்.

நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு, மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விக்ரமின்‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com