

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா, கார்த்தியின் கைதி, விக்ரம் நடித்த அந்நியன், விஷ்ணு விஷாலின் ராட்சசன் உள்ளிட்ட படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன. இதுபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் சூரரைப் போற்று இந்தி ரீமேக் படப்பிடிப்பு பூஜையுடன் தற்போது தொடங்கி உள்ளது.
சூரரைப் போற்று இந்தி படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடிக்கிறார். அக்ஷய்குமார் ஏற்கனவே தமிழில் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்து இருக்கிறார். சூர்யாவின் சூரரைப் போற்று படம் உலக திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்றுள்ளது.