ஜோதிகாவின் “சிஸ்டம்” படத்தை பாராட்டிய சூர்யா

ஜோதிகா நடித்த ‘சிஸ்டம்’ படம் கடந்த 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.
ஜோதிகாவின் “சிஸ்டம்” படத்தை பாராட்டிய சூர்யா
Published on

சோனாக்சி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் நடிப்பில் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள படம்‘சிஸ்டம்’ . இதில் பிரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த மே 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இப்படம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாகும்.

கோர்ட் ரூம் டிராமாவாக வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இதில் சோனாக்சி சின்ஹா வசதி படைத்த மற்றும் செல்வாக்கு மிக்க அரசு வழக்கறிஞராக நடித்துள்ளார். ஜோதிகா எளிய பின்னணியில் இருந்து வந்த நீதிமன்ற சுருக்கெழுத்தாளராக நடித்துள்ளார். சமூக அந்தஸ்தில் முற்றிலும் வேறுபட்ட இந்த இரு பெண்களும், புதைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர எப்படி கைகோர்க்கிறார்கள்? அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கு இடையே அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. இரு வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ‘சிஸ்டம்’ படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

‘சிஸ்டம்’ வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக ஜோதிகா, படத்தின் இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியுடன் மும்பையில் உள்ள பிரபலமான மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வழிபட்டு தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யா ‘சிஸ்டம்’ படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “சிஸ்டம் படம் மிகவும் விறுவிறுப்பான மற்றும் ஈர்க்கக்கூடிய ஒரு படம். ஆழமான நடிப்பு மற்றும் கதைக்களத்துடன் இப்படத்தை உருவாக்கிய அஸ்வினி திவாரி மற்றும் அவரது குழுவினருக்கும், தயாரிப்பாளர் ஹர்மான் பாவேஜா-விற்கும் பாராட்டுகள். சோனாக்‌ஷி சின்ஹா, நேகாவாக நீங்கள் நடித்திருந்தது மிகவும் வலிமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜோதிகா, சாரிகா கதாபாத்திரமாகவே நீங்கள் முழுதாக மாறியிருந்ததை காண முடிந்தது. வார்த்தைகளை விட உங்கள் மவுனம் அதிக வலிமை வாய்ந்தது என்பதை நான் எப்போதும் அறிவேன். அதை இப்போது உலகம் முழுவதுமே பார்க்கிறது. உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் பொண்டாட்டி. பிரைம் தளத்தில் இப்படம் பெற்று வரும் அபாரமான வரவேற்புக்கும் சாதனைகளுக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com