

சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு கடந்த சில நாள்களாக தமிழக திரையரங்குகளில் சாமியாடிக்கொண்டிருக்கிறது என்றாலும் மிகையாகாது. விடுமுறை நாள்களுக்கு வந்த கூட்டம் வேலை நாள்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
ஏற்கெனவே, ‘கருப்பு’ படம் உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் மூலம், சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘கருப்பு’ பதிவு செய்துள்ளது. நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரில், திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.200 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.திரைப்படம் விரைவில் ரூ. 300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.