

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், திரையரங்குகளில் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. படத்தின் வெற்றிக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் வசூல் சாதனை படைத்த இப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படும் இப்படம், 100 நாட்களாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.மேலும், ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் சில திரையரங்குகளில் கணிசமான ரசிகர்களும் படத்தைப் பார்க்க வருகின்றனர்.
இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்கங்களில் 100 நாளை நிறைவு செய்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம், மாபெரும் வெற்றி என ‘கருப்பு’ சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
‘கருப்பு’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்ததையொட்டி நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கண்ணுங்களா... செல்லங்களா... சாமிகளா... என் சாமிகளா! கருப்பு திரைப்படத்தை உங்கள் சொந்தப் படமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடியதற்கு கோடான கோடி நன்றிகள் இந்த மாபெரும் வெற்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது" என்று தனது நெகிழ்ச்சிப்பதிவை பகிர்ந்துள்ளார்.
இப்படத்தின் இயக்குநரும், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவருமான ஆர்.ஜே. பாலாஜி, “ஒரு தேவதைக் கதைப் பயணத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு தலைமுறைகள், ஆனாலும், கருப்பு திரைப்படம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்து வாழ்கிறது. இது ஒரு தலைமுறை பிளாக்பஸ்டர். நன்றி இறைவா..! நன்றி மக்களே.! இதைவிடச் சிறந்த வரவேற்பையும் அங்கீகாரத்தையும் கேட்டிருக்க முடியாது.! கருப்பா, என்னுடன் வா” என்று பதிவிட்டுள்ளார்.
நீண்ட காலம் கழித்து 100 நாள்களை நிறைவு செய்யும் சூர்யா திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். சூர்யா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வெற்றிப்படமாகி ரூ.200 கோடி வரை வசூலித்துள்ளது.