25வது நாளை கடந்த சூர்யாவின் “கருப்பு” திரைப்படம்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
25வது நாளை கடந்த சூர்யாவின்  “கருப்பு” திரைப்படம்
Published on

சென்னை,

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வெளியான நாள்முதல் வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.

படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

வசூலில் சாதனை படைக்கும் ‘கருப்பு’

கோடை விடுமுறை காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட ‘கருப்பு’, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. படம் வெளியான பல வாரங்களுக்குப் பிறகும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்கு வசூல் மூலம் மட்டும் இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் ‘கருப்பு’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார்களை பரிசாக வழங்கினார் சூர்யா.

இந்நிலையில், ‘கருப்பு’படம் தற்போது 25வது நாளை கடந்துள்ளது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘கருப்பு’ படம் பதிவு செய்துள்ளது.

ஓடிடி வெளியீடு எப்போது?

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ‘கருப்பு’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன்படி, ‘கருப்பு’ திரைப்படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com