வாடகைத்தாய் குழந்தை சர்ச்சை: நயன்தாரா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

வாடகைத்தாய் குழந்தை சர்ச்சையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பாதிப்பு வராது என சட்ட நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளனர்.
வாடகைத்தாய் குழந்தை சர்ச்சை: நயன்தாரா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?
Published on

நடிகை நயன்தாரா-டைரக்டர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக வெளியான தகவல் சர்ச்சையாகி உள்ளது. இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறை தடை செய்யப்பட்டு உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்து உள்ளார். இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சில சட்ட விதிகள் உள்ளன. தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற தகுதிச் சான்றுகள் தாக்கல் செய்யவேண்டும். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை இல்லாமல் இருக்க வேண்டும்.

தம்பதியினரில் மனைவியின் வயது 25 முதல் 50 ஆகவும், கணவரின் வயது 26 முதல் 55 ஆகவும் இருக்க வேண்டும். தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் யாரும் இருக்கக் கூடாது. இதில் மனநிலை மாற்றுத்திறனாளி, நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருந்தால் விதி விலக்கு உண்டு. தம்பதியரில் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லை என்பதற்கான சான்றினை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் மீறினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சட்ட நிபுணர்கள் தரப்பில் கூறும்போது, ''வாடகைத்தாய் சட்ட அறிவிப்பு ஜனவரி 25-ந்தேதிக்கு பின்னர் வந்தது. ஆனாலும் சட்ட விதிகள் ஜூன் 26-ந்தேதி தான் நடைமுறைக்கு வந்தன. நயன்தாரா வாடகைத்தாய் குழந்தை பெற ஜனவரி மாதத்துக்கு முன்பே பதிவு செய்து இருப்பார். எனவே வாடகைத்தாய் சட்டத்தால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பாதிப்பு வராது. இதில் சட்ட மீறல் நடக்கவில்லை" என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com