

20-வது திருமண நாளைக் கொண்டாடும் விதமாக சூர்யா - ஜோதிகா, தங்களது மகள், மகன் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா. 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்த சூர்யா - ஜோதிகா, அதன் பிறகு 'பேரழகன்', 'காக்க காக்க', 'மாயாவி' உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 2006-ம் ஆண்டு 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் இணைந்து நடித்த அவர்கள், அப்படம் வெளியான 3-வது நாளில் செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.
பல தம்பதிகளின் ஆதர்ச ஜோடிகளாக இருக்கும் சூர்யா - ஜோதிகாவுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திரைத்துறையினரின் திருமணம் என்றாலே நீண்ட காலம் நிலைக்காது என்ற பார்வையே நீடித்துவரும் சூழலில், சூர்யா - ஜோதிகா தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர்.
இந்த தம்பதி கடந்த 11-ம் தேதி தங்களது 20-வது திருமண நாளைக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக இருவரும் மகள், மகன் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். வெளிநாட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோவை 'தி சீக்குவல்' (THE SEQUEL) என்று குறிப்பிட்டு சூர்யா - ஜோதிகா தம்பதி பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் ஜோதிகா தெரிவித்திருப்பதாவது:-
எங்களது 20 ஆண்டுகால அன்பையும், சண்டைகளையும் கொண்டாடும் ஒரு திருமண உறுதிமொழி புதுப்பிப்பு. இது ஒரு குறையற்ற திருமணத்தின் கொண்டாட்டம் அல்ல. இது குறைகளின் கொண்டாட்டம். விட்டுக்கொடுத்தல், புரிதல், தியாகங்கள் மற்றும் சுயநலமின்றி ஒருவரை ஒருவர் நேசித்ததின் கொண்டாட்டம்.
நான் மகிழ்ச்சியாக இருப்பேன், வாழ்க்கையைக் கொண்டாடுவேன், குறைகளைச் சொல்லாமல் இருப்பேன், நன்றியுடன் இருப்பேன், ஆரோக்கியமாக இருப்பேன், சிறந்த தாயாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
எப்போதும் அந்தக் குறைகள் நிறைந்த மனைவியாகவே இருப்பேன் என்று என் சூர்யாவுக்கு உறுதியளிக்கிறேன். சண்டை போடுவேன், பிறகு சமாதானமாகிவிடுவேன். ஒவ்வொரு முறையும் அந்தச் சண்டைகளுக்குப் பிறகு, உன்னுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகி, நம் உறவை இன்னும் அழகாக வளர்த்துக்கொள்வேன்.
எல்லாவற்றையும் விட, நம் நட்பை நான் பொக்கிஷமாகப் போற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். நம் அடுத்த இருபது ஆண்டுகளுக்காக... குறைகளோடு இருக்கும் நாம், முழுமையான புரிதலோடு... இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.