சுயமரியாதையை என்றுமே விட்டுக்கொடுக்க மாட்டேன் - டி.ராஜேந்தர்

என் வாழ்க்கையில் நான் சந்தித்த அவமானங்களும், அசிங்கங்களும் அதிகம் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
டி.ராஜேந்தர்
கோப்புப்படம்
Published on: 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கலைஞருமான டி.ராஜேந்தர் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னை தியாகராய நகரில் ஏழை, எளிய மக்களுக்கு அவர் அரிசி தானம் வழங்கினார்.

பின்னர் டி.ராஜேந்தர் கூறும்போது, "சாய் ரமணி இயக்கத்தில் 'கன்னடத்து பைங்கிளி' என்ற திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கிறேன். படக்குழுவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று இளையராஜா ஒரு பாடல் பாடி கொடுத்துள்ளார்.

முன்னதாக இந்த படத்துக்காக அவரை பாட வைக்க அழைத்தபோது, அவர் வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வியும் இருந்தது. எனக்கு நிறைய தயக்கமும் இருந்தது. ஏனெனில் நான் ரொம்ப சுயமரியாதை, தன்மானம் கொண்டவன். சுங்குவார்சத்திரத்தில் சுக்கு காபி விற்றாலும் விற்பேனே தவிர, சொர்க்கமே கிடைக்கிறது என்பதற்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்.

என் வாழ்க்கையில் நான் சந்தித்த அவமானங்களும், அசிங்கங்களும் அதிகம். எந்த துயரம், கேலி, கிண்டல் வந்தாலும் அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட வேண்டும். அதேபோல என்னிடம் 'இருக்கணும்... இருக்கணும்...' என்ற எண்ணத்தை மாற்றி 'கொடுக்கணும்... கொடுக்கணும்...' என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை இளைய தலைமுறையினருக்கு எனது அறிவுரையாக சொல்லிக் கொள்கிறேன்", என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com