

சென்னை,
சென்னைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கே. ராஜன் (வயது 85) காலமானார். 1983-ல் ‘பிரம்மச்சாரிகள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான அவர், ‘டபுள்ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளில்லை’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் கே.ராஜன் நேற்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துகொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கே.ராஜனின் திடீர் தற்கொலை முடிவு, தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியினை உருவாக்கியுள்ளது.
இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது, "தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட அண்ணன் கே.ராஜன், ஏன் விரக்தியடைந்து இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை..அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை.. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.." என்று தெரிவித்துள்ளார்.