தமிழ்–தெலுங்கு–இந்தியில் உருவாகும் டி.ராஜேந்தர் படம் ‘இன்றையக் காதல் டா’

தமிழ் பட உலகில், ‘சகலகலா வல்லவர்’ என்று அழைக்கப்படும் டி.ராஜேந்தர், சில வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.
தமிழ்–தெலுங்கு–இந்தியில் உருவாகும் டி.ராஜேந்தர் படம் ‘இன்றையக் காதல் டா’
Published on

டி.ராஜேந்தர் இயக்கும் படத்துக்கு இன்றையக் காதல் டா என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இதுபற்றி அவர் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில், நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், மோனிஷா என் மோனலிசா, சொன்னால்தான் காதலா, சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை, வீராசாமி ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம், சிம்பு சினி ஆர்ட்ஸ். சில வருட இடைவெளிக்குப்பின் இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரு பிரமாண்டமான படம் தயாரிக்கிறது.

இதில், கதை நாயகனாக நான் (டி.ராஜேந்தர்) நடிக்கிறேன். கதாநாயகர்களாக 2 புதுமுகங்களையும், கதாநாயகிகளாக 2 புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறேன். நமீதா வில்லியாக ஒரு பெண் தாதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இதுவரை நடித்திராத வேடம், இது. ராதாரவி, இளவரசன், வெ.ஆ.மூர்த்தி, தியாகு, பாண்டு, வி.டி.வி.கணேஷ், ரோபோ சங்கர், ஜெகன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இது, முழுக்க முழுக்க காதல் கதை. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை நான் (டி.ராஜேந்தர்) ஏற்றுள்ளேன். படத்தின் இணை தயாரிப்பு: உஷா ராஜேந்தர், பரூக்.

கவண் படத்துக்குப்பின், எனக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தன. அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், இன்றையக் காதல் டா படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் கவனம் செலுத்தினேன். அந்த பணி நிறைவடைந்தது. படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்புக்கு தயாராகி விட்டோம்.

சர்கார் படத்தில் புகைபிடிக்கும் காட்சியை எதிர்த்துள்ளனர். நிறைய நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்கின்றனர். அவர்களை விட்டுவிட்டு விஜய்யை மட்டும் குறி வைக்கிறார்கள். இப்படி எதிர்ப்பவர்கள் புகையிலையை தடை செய்ய சொல்ல வேண்டியது தானே.

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com