காதல் அனுபவத்தை பகிர்ந்த டாப்சி

image courtecy:instagram@taapsee
எனக்கு முதல் பார்வையிலோ அல்லது ஒரு மாதத்திலோ காதல் வரவில்லை என்று டாப்சி கூறினார்.
சென்னை,
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள டாப்சி டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்தார். இருவரும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் மத்தியாஸ் போவுடன் காதல் மலர்ந்தது குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், "எனக்கு முதல் பார்வையிலோ அல்லது ஒரு மாதத்திலோ காதல் வரவில்லை. மத்தியாசை சந்தித்ததும் அவர் மீது மரியாதை உருவானது. அவரை ஒரு சாதாரண மனிதராகவே உணர்ந்தேன்.
அதன்பிறகு அடிக்கடி சந்தித்தோம். ஒரு கட்டத்தில் அவரை நேசிக்க தொடங்கினேன். ஆனாலும் காதலை உடனடியாக வெளிப்படுத்தவில்லை. அதற்கு நிறைய காலம் எடுத்துக் கொண்டோம். காதல் நடைமுறைக்கு ஒத்துவருமா என்று யோசிக்கவும் நேரம் எடுத்துக் கொண்டேன்.
இறுதியில் எனக்கானவரை கண்டுபிடித்து விட்டேன் என்ற உணர்வு ஏற்பட்டது. இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம்''என்றார்.






