

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ஆட்டி. அபி நக்ஷத்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதல் சுகுமார், சவுந்தர், ஆனந்த சவுந்தரராஜன், பிரவீன் பழனி சாமி, ஆலன் கிருஷ்ணன், சரண் சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தி.கிட்டு இயக்கியுள்ளார்.
வருகிற 12-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் 'ஆட்டி' படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது:-
தமிழ் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்று இருக்கின்றனர். அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி வந்துள்ளனர் என்பதனை மூலக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ஆட்டி திரைப்படம்.
உண்மையில் இன்று பெமினிஸம், பெண்ணியம், பெண் உரிமை பற்றி மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பேசிக்கொண்டிருப்பதனை நாம் காண்கின்றோம். பெண்கள் கல்வி கற்க வேண்டும், பெண்கள் வேலைக்குச்செல்ல வேண்டும், அவர்களை ஆண்களுக்கு நிகராக நடத்த வேண்டும் என பல்வேறு புரட்சி கரகோசங்கள் ஒரு பக்கம். ஆனால் கல் தோன்றி மண் தோண்றாக்காலத்து மூத்த குடியான தமிழ்க்குடியில் என்றோ ஆரம்பமாகிவிட்டது. தமிழ் பெண்கள் போர்க்கலையிலும் கல்வியிலும் விளையாட்டிலும் மன்னர்களின் காலத்திலிருந்தே சிறந்து விளங்கி உள்ளனர். அதனையும் ஆட்டி திரைப்படத்தில் பதிவு செய்ய தவறவில்லை படக்குழு.
இந்தப் படத்துக்கு 'ஆட்டி' என்று தலைப்பு சூட்டியது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆட்டி என்பது ஆட்சி, ஆச்சி என்பதன் கோர்வையாகும். ஆச்சி என்பவள் நம் வீட்டின் மூத்த தாய். நம் எல்லோரையும் வழி நடத்தக்கூடியவள். ஆட்சி என்பது ஒன்றை ஆள்வதாகும். இதனாலேயே ஆட்டி என்பது அனைவரையும் ஆட்டி வைக்கக்கூடியவள் என்ற பொருள் பட வருகின்றது.
இந்தக் கதையில் பல்லாண்டுகளுக்கு முன்பாக பெண்கள் அனுபவித்த கொடுமைகளை, எதார்த்தம் குறையாமல் உண்மை சம்பவங்களின் தொகுப்பாக உணர்ச்சி சுட்டும் கவிதைகளாக காட்சிப்படுத்தி இருக்கிறோம். இதில் அமைதியை ராஜ் என்ற கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக இசக்கி கார்வண்ணன் நடித்துள்ளார். கண்களிலேயே வசனங்களை பேசி நடித்த விதம் பார்வையாளர்களை ரசிக்க செய்யும். அழகாலும் நேர்த்தியான நடிப்பாலும் அபி நக்ஷத்ரா கவர்கிறார். மேலும் படத்தில் நடித்த அத்தனை நடிகர் நடிகைகளும் எதார்த்தமான நடிப்பை அள்ளிக் கொட்டி இருக் கிறார்கள். இதனால் படம் எதிர்பார்ப்பை தாண்டிலும் சிறப்பாகவே தயாராகி இருக்கிறது. தரமான நல்ல படங்களை அங்கீகரிக்க தமிழ் ரசிகர்கள் என்றுமே தயங்கியது கிடையாது. அது இந்த படத்திலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம், என்று பட குழுவினர் தெரிவித்தனர்.