நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த தமிழ் திரையுலக இயக்குநர்கள்

நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்திற்கு திரைப்பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த தமிழ் திரையுலக இயக்குநர்கள்
Published on

நீட் தேர்வுக்கு எதிராக இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நேரடியாகக் களம் இறங்குகின்றனர்.

நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் CJP, SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் எழும்பூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இசைக்கலைஞர் அறிவு போன்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 3:00 மணியளவில், சென்னை எழும்பூரில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், நடிகர் சத்யராஜ், நடிகை ரேவதி மற்றும் பல திரை நட்சத்திரங்கள், கலைஞர்கள் நேரடியாக களம் இறங்குகின்றனர்.

வடமாநிலத்தில் ஆலியா பட், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தென்னிந்திய திரையுலகம் சென்னை மண்ணில் நேரடியாக வீதியில் இறங்கி போராடத் துணிந்துள்ளது.

திரையுலகினரின் முக்கியக் கோரிக்கைகள்:

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்:

மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் முறையை முழுமையாக ரத்து செய்து, மாநில பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கையை மீட்டெடுக்க வேண்டும்.

மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு கண்டனம்:

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகளைக் கண்டிப்பது.

கல்வி உரிமை மீட்பு:

கல்வித் துறையில் தொடரும் முறைகேடுகளுக்கு ஒன்றிய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் மற்றும் கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' மற்றும் தமிழ் திரையுலக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இப்போராட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திரையுலகின் குரல்:

"இது ஏதோ சில மாணவர்களின் பிரச்சனை அல்ல; நமது அடுத்த தலைமுறையின் கல்வி உரிமை மற்றும் வாழ்வாதாரப் போராட்டம். நீதிக்காக வீதியில் போராடும் இளைஞர்களின் குரலை உரக்க ஒலிக்கச் செய்ய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் மாலை 3 மணிக்கு எழும்பூரில் ஒன்று கூடுவோம்!" என்று திரைப்பிரபலங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com