

சென்னை,
2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், மேலும் 2015–2016 கல்வியாண்டு முதல் 2021–2022 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த விருதுகளை, அடுத்த மாதம் 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.
திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்கள் ஆகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகள் ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும், ‘மாநகரம்’, ‘அறம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’, ‘கூழாங்கல்’, ‘ஜெய் பீம்’, ‘கார்கி’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சிறந்த நடிகர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், தனக்கு விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2018 ம் ஆண்டிற்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர் என இரண்டு விருதுகளை பரியேறும்பெருமாள் திரைப்படத்திற்கும் , 2021 ம் ஆண்டிற்கான சிறந்த வசனம், சிறந்த கலை, சிறந்த மூன்றாவது படம் என மூன்று விருதுகளை கர்ணன் திரைப்படத்திற்கும் வழங்கி கவுரவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்கள் நன்றிகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துகொள்கிறோம்” என அவர் பதிவிட்டுள்ளார்.