“இருமுடி” பட தயாரிப்பாளருக்கு தெலுங்கானா அரசு நோட்டீஸ்

ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள ‘இருமுடி’ திரைப்படம் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
“இருமுடி” பட தயாரிப்பாளருக்கு தெலுங்கானா அரசு நோட்டீஸ்
Published on: 

‘இருமுடி’ படத்தில் குழந்தை நட்சத்திரம் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தெலுங்கானா தொழிலாளர் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிவா நிர்வாணா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், பேபி நட்சத்திரா மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான தெலுங்குப் படம் ‘இருமுடி’. இப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியானது. மொத்தமாக 250 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

தெலுங்கானா தொழிலாளர் நலத்துறை நோட்டீஸ்

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி நட்சத்திரா, பங்கேற்றது தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தெலுங்கானா தொழிலாளர் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நவம்பர் 4ம் தேதி நேரில் ஆஜராக அறிவுரை

சிறார்களைத் திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கும், விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வதற்கும் மாவட்ட கலெக்டரிடம் முன்கூட்டியே அனுமதி பெறுவது கட்டாயம். இந்த நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்க, வரும் நவம்பர் 4ம் தேதி நேரில் ஆஜராகுமாறு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுமியைப் படப்பிடிப்பில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக உரிய அனுமதி பெறப்பட்டதா, அவருக்கான ஊதியத்தில் சட்ட விதிகளின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா, பணியாற்றிய நேரம் உள்ளிட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

குறிப்பாக, சிறுமிக்கு வழங்கப்படும் மொத்த ஊதியத்தில் 20 சதவீதத் தொகையை அவரது பெயரில் நிலையான வைப்புத் தொகையாகச் செலுத்தியிருக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதற்கான ஆவணங்களையும் தயாரிப்பு நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், படப்பிடிப்பு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளின்போது சிறுமி பணியாற்றிய நேரம் குறித்த விவரங்கள், அவரது பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் மற்றும் பள்ளிக் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களையும் தொழிலாளர் நலத்துறை கோரியுள்ளது.

‘இருமுடி’ படம் கடந்த செப்டம்பர் 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

X