பெண் மருத்துவர் எரித்து கொலை; கொடூர சைக்கோக்கள் வேட்டையாடப்பட வேண்டும்: நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவேசம்

கால்நடை பெண் மருத்துவரை எரித்து கொன்ற சம்பவத்தில் கொடூர சைக்கோக்கள் வேட்டையாடப்பட வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவேசமுடன் கூறியுள்ளார்.
பெண் மருத்துவர் எரித்து கொலை; கொடூர சைக்கோக்கள் வேட்டையாடப்பட வேண்டும்: நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவேசம்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே பாலம் ஒன்றின் கீழ் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கொல்லப்பட்டவர் பிரியங்கா ரெட்டி (வயது 27) என்பதும் கால்நடை பெண் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. அவர், கொல்லூர் பகுதியில் இருந்து பணி முடிந்து ஷம்ஷாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்துள்ளார்.

வழியில் அவரது வாகனம் பழுதடைந்து உள்ளது. இதுபற்றி தனது சகோதரியிடம் செல்போன் வழியே பேசியுள்ளார். இரவு 9.22 மணியளவில் பேசிய அவரிடம், சுங்க சாவடியில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நிற்கும்படி சகோதரி கூறியுள்ளார்.

ஆனால் அந்த பகுதி அசுத்தம் நிறைந்துள்ளது. அதனால் அங்கே நிற்க முடியவில்லை என பிரியங்கா கூறியுள்ளார். பின்னர் 9.44 மணிக்கு தொடர்பு கொண்டபொழுது பிரியங்காவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சுங்க சாவடிக்கு சென்று அவரை தேடியுள்ளனர். இதேவேளையில் அங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் எரிந்து கிடந்த உடல் பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்பின்பு குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் கொல்லப்பட்டவர் பிரியங்கா என போலீசார் உறுதிப்படுத்தினர்.

அவர் சுங்க சாவடி அருகே தனியான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு, கற்பழிக்கப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்பு மிக்க நகரம் என நான் நினைத்து கொண்டிருக்கும் ஐதராபாத் போன்ற நகரில் நடந்த இதுபோன்ற சம்பவத்தில் யாரை குறை சொல்வது என எனக்கு தெரியவில்லை. கூறுவதற்கு வார்த்தைகளில்லை.

நமது நாடு, பெண்கள் எந்த நேரத்திலும் செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பு நிறைந்த நாடாக என்றைக்கு உருவாகும். இதுபோன்ற அனைத்து கொடூர சைக்கோக்களும் வேட்டையாடப்பட வேண்டும். தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்.

கொல்லப்பட்ட பிரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த இழப்பில் இருந்து மீண்டுவர கடவுள் அவர்களுக்கு வலிமை அளிக்கட்டும். குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் உதவட்டும். கர்மாவின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அது முடிவில்லாமல் தொடர்ந்து வேலை செய்யும் என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com