

உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். அதனால் தலைவர் 173 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் படமான ‘தி அவுட்பிட்' படத்தின் தழுவலாக இந்த படம் உருவாக இருப்பதாகவும், ரஜினிகாந்த் இதில் டெய்லராக நடிக்கப் போவதாகவும், இது 70 காலகட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்றும் பேசப்படுகிறது. ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகும் இந்த புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.