கதாநாயகி, பாடல் இல்லாமல் விஜய்யின் 67-வது படம்?

வித்தியாசமான திரைக்கதையில் விஜய்யின் 67-வது படத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்.
கதாநாயகி, பாடல் இல்லாமல் விஜய்யின் 67-வது படம்?
Published on

விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் நேரடி தெலுங்கு படமாக தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள்.

இந்த படம் கைதி சாயலில் கதாநாயகி, பாடல் இல்லாத முழு அதிரடி படமாக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்தியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. பிறமொழிகளிலும் கைதி ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதுபோன்ற பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் விஜய்யின் 67-வது படத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படம் வெளியானதும் விஜய் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com