கோவாவில் இன்று கோலாகலமாக தொடங்கும் 54வது சர்வதேச திரைப்பட விழா... திரையிடப்படும் தமிழ் படங்களின் முழு விவரம்..!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக சிறந்த வெப்சீரிஸ் பிரிவு அறிமுகப்படுத்தபட்டு உள்ளது.
கோவாவில் இன்று கோலாகலமாக தொடங்கும் 54வது சர்வதேச திரைப்பட விழா... திரையிடப்படும் தமிழ் படங்களின் முழு விவரம்..!
Published on

பனாஜி,

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவானது உலகளவில் நடத்தப்படும் 14 மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் தொடக்க விழாவில் மாதுரி தீக்ஷித், ஷாகித் கபூர், ஸ்ரேயா சரண், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். சல்மான் கான், ஏ.ஆர்.ரகுமான், ஆயுஷ்மான் குரானா, விக்கி கவுசல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விழாவின் மற்ற நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 இடங்களில் மொத்தம் 9 நாட்கள் நடைபெற உள்ள இந்த பிரமாண்ட விழாவில், 270க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளதாகவும், அதில் 89 இந்திய திரைப்படங்கள், 62 ஆசிய திரைப்படங்கள், 10 சர்வதேச திரைப்படங்கள், 13 உலக திரைப்படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்-க்கு 'சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது' வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு முதல் முறையாக சிறந்த வெப் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் 15 ஓடிடி தளங்களில் இருந்து 10 மொழிகளை சேர்ந்த 32 வெப் சீரிஸ்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கோல்டன் பீகாக் விருதுக்காக 15 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 3 இந்திய திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.

இந்திய மொழி படங்களை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், கார்பி உள்ளிட்ட மொழிகளை சேர்ந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்திய பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 25 படங்களில் வெற்றிமாறனின் 'விடுதலை', ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'காதல் என்பது பெதுவுடைமை', சம்யுக்தா விஜயன் இயக்கிய 'நீல நிற சூரியன்' ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன.

அதேபோல் மெயின்ஸ்ட்ரீம் சினிமா பிரிவில் தேர்வாகியுள்ள 5 படங்களில், மணிரத்னம் இயக்கிய "பென்னியின் செல்வன் இரண்டாம் பாகம்" திரைப்படமும், சுதிப்தோ சென் இயக்கி நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய "தி கேரளா ஸ்டோரி" படமும் இடம்பிடித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com