

கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதலில் கன்னட படத்தில் அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார்.சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார். ‘ரணபலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி சமீபத்தில் இணைந்து நடித்தனர்.
ரவீந்திர புல்லே இயக்கும் ‘மைசா’ படத்தில் போர் வீராங்கனை போல அதிராடியான கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி எதிர்பார்பை எகிற வைத்திருக்கிறது. அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இதில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
‘புஷ்பா 2’ பட வில்லன் தாரக் பொன்னப்பா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கேஜிஎப், தேவரா படங்கள் மூலம் கவனிக்கப்பட்ட தாரக் பொன்னப்பா, சமீபத்தில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இது ராஷ்மிகாவுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படமாகும்.
கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் படமான இதில் ராஷ்மிகாவின் தோற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படத்துக்காக, சாகச நுட்பங்கள் கொண்ட ஆக்ஷன் காட்சிக்கான பயிற்சியை ராஷ்மிகா மந்தனா தாய்லாந்தில் மேற்கொண்டார். ‘மைசா’ படத்திற்காக, ரஷ்மிகா பேங்காக்கில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த புகைப்படங்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆக்ஷன் காட்சிக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வந்தது. இப்போது அது நிறைவு பெற்றுள்ளது. இதை நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். “கேரளாவில் நடைபெற்று வந்த ‘மைசா’ படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். கடுமையாக உழைத்து சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் கண்டிப்பாகப் பேசப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.