

தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் துல்கர் சல்மான். வாயை மூடி பேசவும், நடிகையர் திலகம் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் மம்முட்டியின் மகன். தற்போது இந்தியில் தயாராகும் த ஸோயா பேக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோடியாக சோனம்கபூர் நடிக்கிறார்.
துல்கர் சல்மான் காருக்குள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து செல்போன் பார்ப்பது போன்றும் அருகில் ஒரு பெண் ஆபத்தானவர் என்று பேசுவது போன்றும் ஒரு வீடியோவை மும்பை போலீசார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
இது நிஜமாகவே ஆபத்தானதுதான். கார் ஓட்டும்போது இப்படி செய்வது உடன் பயணிப்போரின் உயிருக்கும் உலை வைக்கும். இதுபோன்று செயல்படுவதை சினிமாவில் கூட அனுமதிக்க மாட்டோம் என்று அவருக்கு கண்டனத்தையும் பதிவிட்டு இருந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு துல்கர்சல்மான் விளக்கம் அளித்து கூறியதாவது:-
நான் காரில் டிரைவர் இருக்கையில் இருந்து செல்போன் பார்க்கும் வீடியோ இந்தி படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது. நான் ஓட்டிய கார் டிரக்கில் கட்டப்பட்டு இருந்தது. முன்னால் கேமரா இருந்தது. நான் நினைத்தாலும் காரை ஓட்டவோ திருப்பவோ முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
சோனம் கபூர் தனது டுவிட்டரில் வெளியிட்ட இந்த வீடியோவை போலீசார் உண்மையானது என்று தவறாக கருதி அவரை கண்டித்து இருப்பது தெரியவந்தது.