

‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் சித்து- தர்ஷிகா நடிக்கும் ‘தி லாஸ்ட் கேஸ்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.
சித்து, தர்ஷிகா நடிப்பில் அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. கிரைம் திரில்லராக உருவாகியிருந்த இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி இயக்கியிருந்தார்.
இந்நிலையில் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘தி லாஸ்ட் கேஸ்’என்கிற இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு சென்னை பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தை பாலாஜி இயக்க நடிகர்கள் சித்து, தர்ஷிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தையும் ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கிறது
இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. ஒவ்வொரு குற்றமும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்லும். அது குற்றவியல் சம்பந்தமான ஒரு கோட்பாட்டைத் திருத்தி எழுதும்' என்ற விறுவிறுப்பான கருத்தை மையமாகக் கொண்டு, உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் ஒரு மலைப்பிரதேசத்தில் நடக்கும் புலனாய்வு கதையாக இப்படம் உருவாகவுள்ளது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் பாலாஜி, “முந்தைய படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சித்து, தர்ஷிகா, ஜெயக்குமார் ஆகியோரே இதிலும் தொடர்கிறார்கள். ஆனால், 'தி டார்க் ஹெவன்' போல் இருக்குமோ என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில் முற்றிலும் மாறுபட்ட கதையாக இது இருக்கும்.
அதில் பேண்டஸி கலந்திருக்கும், இதில் அது இருக்காது. மாறாக, கதாபாத்திரங்களின் ஆழமான உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நிலவியல் காட்சிகள் படத்திற்கு வேறுவிதமான அனுபவத்தைத் தரும். மலைப்பகுதியில் நடைபெறும் குற்றம் புலனாய்வு சார்ந்த கதையாக உருவாகும் இத்திரைப்படம் ரசிகர்கள் விரும்பும் வகையில் உருவாகும்” என்றார்.