

சென்னை,
பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா(வயது 76) இன்று காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சாவாப் பாடல்கள் தந்த தேவா மறைந்துவிட்டார். தேனிசைத் தென்றல் நின்று போயிற்றா? நெஞ்சு கனக்கிறது. தன் பேச்சு மூச்சு அனைத்திலும் இசையாகவே இருந்தவர். சங்கீதத்தோடு இங்கிதம் தெரிந்தவர். பண்ணிசைக்கத் தெரிந்த பண்பாளர்.
அவரோடு நான் பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா அருணாசலம், வாலி, குஷி, நேருக்கு நேர், ஆசை, பஞ்ச தந்திரம் முதலிய நூற்றக்கணக்கான படங்களின் பாட்டு வெற்றிக்கு தேவாவே காரணம். தேவாவின் இசையைப்போல் ரஜினிக்கு வேறு யாரும் பொருந்தவில்லை என்றுதான் ரசிகர்கள் பேசுவார்கள்.
என்ன சொல்வது? எனக்கு என் விரல்களில் ஒன்று போய்விட்டது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் கவலைப்படாதே சகோதரா என்று பாடியவனே! இன்றுநான் கவலைப்படாமல் என்ன செய்ய?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.