

கடற்கரையில் நீங்கள் வாங்கியிருக்கும் புதிய பங்களா எப்படி இருக்கிறது?
அழகாக இருக்கிறது. மும்பை ஜூகு பகுதியில், அமெரிக்க பாணியில் அந்த பங்களா கட்டப்பட்டிருக்கிறது. அதில் என் தங்கையுடன் விரைவில் குடியேறப் போகிறேன். நகரைவிட்டு சற்று தள்ளி அமைதியாக கடற்கரை ஓரமாக இருக்கும் இந்தப் பங்களாவில் வசிக்கப்போவதை நினைத்தாலே உடலில் உற்சாகம் பொங்குகிறது.
உங்களுடைய முதல் கனவாக இருந்தது எது?
என்னுடைய முதல் கனவே சொந்த வீடு வாங்குவதுதான். எனக்கு கூடுதலாக இரண்டு கனவுகளும் உண்டு. இரண்டாவது கனவு ஷாருக்கானுடன் நடிப்பது. மூன்றாவது கனவு இத்தாலியன் உணவு வகைகளை சமைக்கக் கற்றுக் கொள்வது. இதில் முதல் இரண்டு கனவுகள் நிறைவேறிவிட்டது. வீடும் வாங்கிவிட்டேன். ஷாருக்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்துக் கொண்டிருக்கிறேன். மூன்றாவது கனவும் விரைவிலேயே நிறைவேறப் போகிறது. அதற்கான திட்டமும் தயார்.
ஷாருக்கானுடன் நடிக்க அவ்வளவு ஆர்வம் ஏன்?
ஷாருக்கானுடன் நடிப்பது மகிழ்ச்சியான அனுபவம். நிறைய விஷயங்களை கற்றுக்கொடுப்பார். தன்னுடைய நடிப்பு மட்டுமல்லாமல் உடன் நடிப்பவர்கள் நடிப்பும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர் அவர். நடிப்பையும், நடிப்பவர்களையும் நேசிப்பவர் ஷாருக்கான்.
டியர் ஜிந்தகி படத்தில் நிறைய கற்றுக்கொடுத்தாரோ?
ஒரு பெரிய காட்சியை இயக்குனர் விளக்கிச் சொல்லிவிட்டு போனதும் ஷாருக்கான் அதை தனித்தனியாக பிரித்து சின்னச் சின்ன காட்சியாக விளக்கி நமக்கு புரியவைப்பார். அதை உள்வாங்கிக்கொண்டு சிறப்பாக நம்மால் நடிக்க முடியும். ஒரு வாத்தியார் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதைப் போல அது இருக்கும்.
உங்கள் கனவு நிறைவேறியதும் என்ன செய்வீர்கள்?
என் நெருங்கிய நண்பர்களை அழைப்பேன். சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளவும், சங்கடத்தை வெளிப் படுத்தவும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது என் மனதில் உள்ளதை அவர்களிடம் கொட்டி விடுவேன். சில நேரம் அழுவேன், கத்துவேன், எல்லாம் நடக்கும்.
ஷர்மிளா தாகூர் தன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அறிவித்தார். அதில் அவரது கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கப் போவதாக சொல்கிறார்களே?
ஷர்மிளா தாகூரை நான் சமீபத்தில் சிங்கப்பூரில் சந்தித்தேன். அப்போது இது பற்றி பேசினார். இது எனக்கு கவுரவம் தரும் விஷயம். ஷர்மிளா பாலிவுட்டில் மறக்க முடியாத கதாநாயகி. அவராக நான் நடிப்பதால் என் மதிப்பு உயரும். அவருடைய இடத்தில் நான் தோன்றுவது பெருமைக்குரிய விஷயம்.
வாரத்தின் இறுதி நாட்களை எப்படி கொண்டாடுகிறீர்கள்?
எனக்கு எப்போதாவதுதான் விடுமுறை கிடைக்கும். அந்த நாளை திட்டம் போட்டு ஒரு திருவிழாவைப் போல கொண்டாடுவேன். காலையில் எழுந்ததிலிருந்து என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும், மத்தியானம் உணவருந்த எந்த ரெஸ்டாரண்ட் போக வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டு பொழுதை கழிப்பேன்.
பொது இடங்களில் ரசிகர்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?
நடிகையான பிறகு நான் பறிகொடுத்த விஷயங்களில் சுதந்திரமும் ஒன்று. சாதாரண பெண்ணாக நான் என் குடும்பத்தோடு சென்று மகிழ்ந்த இடங்களுக்கு இப்போது போக முடியாது. இருக்கவே இருக்கிறது என் போன்ற நட்சத்திரங்களுக்கு நட்சத்திர ஓட்டல்கள். ஆனால் அங்கு ஒவ்வொரு பொருளையும் பத்து மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டும். நிம்மதியும், பாதுகாப்பும் தேவை என்பதால் அது போன்ற இடங்களுக்குதான் போக முடியும். முன்னறிவிப்பு செய்துவிட்டு போகும் பட்சத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்து பத்திரமாக அனுப்பி வைப்பார்கள்.
புது வீட்டிற்கு போவதால் வீட்டு வேலைகளை நீங்களே செய்ய வேண்டியதிருக்குமா?
ஆமாம். என் பெற்றோரை விட்டுவிட்டு புதுவீட்டிற்கு நானும் எனது தங்கையும் செல்லப் போகிறோம். இதுவரை அம்மா எனக்காக செய்த வேலைகளை இனி நானே எனக்காக செய்துகொள்ளவேண்டும். சிறுவயதில் அம்மா என்னை வீடு பெருக்க சொல்லுவார். வீட்டை சுத்தமாக பெருக்கினால் 10 ரூபாய் தருவார். அப்படித்தான் வீட்டு வேலைகளை பழக்கினார். எல்லோருடைய துணியையும் மடித்துக் கொடுக்க 20 ரூபாய். அலமாரியை சுத்தம் செய்ய 50 ரூபாய் என ஒவ்வொரு வேலைக்கும் கூலி தருவார். இப்படி சொந்த வீட்டிலேயே கூலி வேலை செய்த அனுபவம் இனிமேல்தான் எனக்கு பயன் படப்போகிறது.
நடிகர் அனுபம்கேர் அவருக்காகக் கட்டிய வீட்டை உங்களுக்கு கொடுத்துள்ளார். அப்போது அவர் கண்ணீர் விட்டாராமே?
என் அப்பா, அவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த நன்றி எப்போதும் அவருக்குண்டு. அதனால் அந்த வீட்டை அவர் மகிழ்ச்சியுடன் தான் கொடுத்தார். என்னிடம் சாவியை ஒப்படைக்கும்போது எதுவும் நடக்கலாம். எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது என்று கூறி, உணர்ச்சிவசப்பட்டார். என் அப்பா அவரை கட்டித் தழுவி சமாதானப்படுத்தினார். இருவர் கண்களிலும் கண்ணீர்த் துளி. அது ஒரு உணர்வுப்பூர்வமான, மறக்க முடியாத நிமிடம்.
மூன்றாவது கனவை எப்போது நிறைவேற்றப்போகிறீர்கள்?
மூன்றாவது கனவை நிறைவேற்ற இத்தாலி செல்ல விருக்கிறேன். அங்கு தங்கி இத்தாலிய உணவு வகைகளை ருசிக்கப் போகிறேன். அப்படியே சமைக்கவும் கற்றுக்கொள்வேன்.