'பாட்டல் ராதா' படம் மதுவால் ஏற்படும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் - இயக்குநர் பா. ரஞ்சித்


பாட்டல் ராதா படம் மதுவால் ஏற்படும் பாதிப்பு பற்றிய  விழிப்புணர்வை ஏற்படுத்தும் - இயக்குநர் பா. ரஞ்சித்
x
தினத்தந்தி 19 Jan 2025 2:38 PM IST (Updated: 19 Jan 2025 3:07 PM IST)
t-max-icont-min-icon

தந்தையின் குடிப்பழக்கத்தால் தனக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டது என்று இயக்குநர் பா. ரஞ்சித் பேசியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக 'பாட்டல் ராதா' படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் 24 ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன், மிஷ்கின், லிங்குசாமி, பா. ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், ' தினகரன் சிவலிங்கம் என் கல்லூரித் தோழன். நாங்கள் எல்லாரும் ஒன்றாகத்தான் சினிமாவுக்கு வந்தோம். முதலில் நான் இயக்குநராகிவிட்டேன். தினகரனையும் ஜெயக்குமாரையும் (ப்ளூ ஸ்டார் இயக்குநர்) அனிமேஷன் இயக்குநர்களாக மாறச்சொன்னேன். ஆனால், அவர்கள் சினிமா இயக்குநராக மாறிவிட்டனர். படத்தின் கதையை தினகரன் சிறப்பாக எழுதியுள்ளார்.

நான் 12-வது படிக்கும்போது தற்கொலை செய்யலாம் என முயற்சித்தேன். காரணம், என் அப்பா பெரிய குடிப்பழக்கத்தில் இருந்தார். அதனால், என் அம்மா மிகக் கஷ்டப்பட்டார். இதைப்பார்த்து என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், எப்படியோ தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டேன். என் தந்தை மிக நல்லவர், எங்களுக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார். ஆனால், குடி அவரை சீரழித்தது. அதனாலேயே, கிட்னி செயலிழந்து உயிரிழந்தார். பாட்டல் ராதா கதையைப் படிக்கும்போது பல இடங்களில் உணர்ப்பூர்வமாக இருந்தது. குடி ஒரு நோய் என்பது புரியவே நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. இந்தப் படம் ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.' எனத் தெரித்தார்.

1 More update

Next Story