‘காலா’ படம் வெளியாகி வெற்றி பெறும் என்று நம்புகிறேன் கமல்ஹாசன் பேட்டி

‘காலா’ படம் வெளியாகி வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
‘காலா’ படம் வெளியாகி வெற்றி பெறும் என்று நம்புகிறேன் கமல்ஹாசன் பேட்டி
Published on

ஆலந்தூர்,

பெங்களூரில் இருந்து திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவோ, விமர்சனம் செய்யவோ நான் கர்நாடகம் செல்லவில்லை. கர்நாடகம்-தமிழகம் இடையே நல்லுறவுக்கு யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் போகலாம். இது தவறாக இருக்காது என்ற நம்பிக்கையில் சென்றேன்.

பெங்களூருவில் செய்தியாளர்களுடன் சந்திக்கும் போது சினிமா தொடர்பாக பேசவில்லை என்று கூறி இருந்தேன். சினிமா படங்களை காரணமாக வைத்து அதில் சவாரி செய்யும் அரசியலை வெறுக்கிறேன் என்பதற்கு முன்னுதாரணமாக நான் இருக்கிறேன்.

என்னுடைய படங்களுக்கும் பிரச்சினைகள் நிகழ்ந்து உள்ளது. அதுபோல் நிகழகூடாது என்பதற்காக அரசுடன் வழக்கு தொடர்ந்து நீதி பெற்று வந்தவன். நியாயமும் வியாபாரமும் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்கும் நம்பிக்கை இருக்கிறது.

அதுபோல் ரஜினிகாந்த் படத்திற்கும் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது. நியாயமே வெல்லும் என்ற வகையில் விஸ்வரூபம் வெற்றி பெற்றது. அதுபோல காலா படமும் வெளி வந்து வெற்றி பெற்று நல்ல வியாபாரம் செய்யும் என்று நம்புகிறேன்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்கள் விமர்சிக்கப்பட கூடியது. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக பல ஆண்டுகளாக எதிர்த்து போராடித்தான் வென்று எடுக்கப்பட்டு உள்ளது. இனி இரு மாநிலங்களும் ஒற்றுமை வலுப்பெற செய்ய எல்லா வேலைகளையும் எல்லாரும் செய்யலாம். அது என் உரிமை மட்டும் அல்ல.

தமிழிசை பற்றி அவதூறாக பேசிய பெண் கைது செய்யப்பட்டது போல் பெண் ஊடகவியலாளர்களை பற்றி தவறாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யாதது தவறு தான். அநீதி அநீதி தான். இதில் கட்சியோ நபரோ முக்கியமல்ல. தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com