புதுச்சேரி அரசின் சிறப்பு விருது பெறும் 'குரங்கு பெடல்' திரைப்படம்


புதுச்சேரி அரசின் சிறப்பு விருது பெறும் குரங்கு பெடல் திரைப்படம்
x
தினத்தந்தி 1 Oct 2024 11:05 AM GMT (Updated: 1 Oct 2024 11:19 AM GMT)

'குரங்கு பெடல்' படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

சென்னை,

'மதுபானக்கடை', 'வட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'குரங்கு பெடல்'. இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையைத் தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, அலையன்ஸ் பிரான்சே இணைந்து நடத்தும் இந்திய திரைப்பட விழா வருகிற 4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை நடக்கிறது. அதில் புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது சிறந்த திரைப்படமான 'குரங்கு பெடல்' திரைப்படத்திற்கு வழங்கப்பட உள்ளது.

சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை இயக்குனர் கமலக்கண்ணன் பெற உள்ளார். விழா நிறைவில் 'குரங்கு பெடல்' திரைப்படம் திரையிடப்படுகிறது.

அதனை தொடர்ந்து 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நாள் தோறும் ஒரு திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதன்படி 5-ம் தேதி சனிக்கிழமை 'ஆர்.ஆர்.ஆர்' (தெலுங்கு), 6-ம் தேதி 'அரியிப்பு' (மலையாளம்), 7-ம் தேதி 'டானிக்' (வங்காளம்), 8-ம் தேதி 'மேஜர்' (இந்தி) ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.


Next Story