

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
‘அனகனகா ஒ அதிதி’, ‘கொன்றால் பாவம்’, ‘மாருதிநகர் காவல்நிலையம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன், இந்த படத்தை இயக்கியுள்ளார். 2எம் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டிருந்தார்.
படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு, சுப. வீரபாண்டியன் மற்றும் கவிதா பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் படத்தின் கதாபாத்திர அறிமுகக் காணொளியை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். அதில் வெற்றி அறிவுமதி என்ற கைதியாகவும், ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் என்ற சிறை அதிகாரியாகவும், பிரிகிடா சாகா மல்லிகாவாகவும் நடித்திருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. மேலும், படம் இந்த மாத இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.