பெரிய கதாநாயகர்கள் என்னை ஒதுக்கினர் - நடிகை வித்யா பாலன்

பெரிய கதாநாயகர்கள் என்னை ஒதுக்கினர் என நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
பெரிய கதாநாயகர்கள் என்னை ஒதுக்கினர் - நடிகை வித்யா பாலன்
Published on

மும்பை,

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் வித்யாபாலன். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்தார். மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

இந்தியில் வித்யாபாலனை மனதில் வைத்தே கதைகளை உருவாக்குகிறார்கள். ஆனாலும் இதுவரை சல்மான்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் படங்களில் வாய்ப்பு தேடியதாகவும், கதாநாயகிக்கு ஏற்ற தோற்றம் இல்லை என்று ஒதுக்கியதால் இந்திக்கு சென்று முன்னணி நடிகையாக உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சினிமா வாழ்க்கை பற்றி தற்போது மனம் திறந்து பேசியுள்ள வித்யாபாலன், முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடிக்க வைக்காமல் தன்னை ஒதுக்கியதாக குறை சொல்லி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடிக்கவில்லை. அவர்கள் என்னை ஓரம் கட்டுவதாகவும், நிராகரிப்பதாகவும் உணர்ந்தேன். அவர்கள் ஒதுக்கியதற்காக எனக்கு வருத்தம் இல்லை. நல்ல கதைகள்தான் சினிமாவுக்கு ஆன்மாவைப் போன்று இருக்கின்றன. எனவே அப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். அந்த படங்கள் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தன. ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com