“காஷ்மீர் பைல்ஸ்”, “துரந்தர்” படங்கள் மூலம் பரப்பப்படும் வெறுப்பு... - இயக்குநர் வசந்தபாலன்

இந்தியா முழுக்க வெறுப்பை பரப்பக்கூடிய பெரிய சூழலில், வெறுப்புக்கு எதிராக கலையைக் கையில் வைத்திருப்பது இயக்குநர்கள் மட்டும்தான் என்று வசந்தபாலன் கூறியுள்ளார்.
“காஷ்மீர் பைல்ஸ்”, “துரந்தர்” படங்கள் மூலம் பரப்பப்படும் வெறுப்பு... -  இயக்குநர் வசந்தபாலன்
Published on

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித், நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார். இந்தப் பட டிரெய்லர் கவனம் ஈர்த்து வருகிறது. இத்திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘நீளிரா’ படத்திற்கான விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வசந்தபாலன், “தூர்தர்ஷன் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டபோது ஒளிபரப்பப்பட்ட சீரியல் இராமாயணம். இந்தியா முழுக்க இராமாயணம் ஒளிபரப்பானது. எல்லா ஊரிலும் இராமாயணம் ஒளிபரப்பாகும் ஞாயிற்றுக்கிழமை சாமி கும்பிட, வணங்க என நேரத்தை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

இந்திய முழுக்க அது ஒரு தீபோல பரவியது. அப்படி பரவியபோதுதான், ராம ஜென்ம பூமி குழு கிளம்பி ஒரு பெரிய கருத்தியலை விதைக்கிறது, `பாபர் மசூதி இடிப்பு'. இப்படியான கருத்தியல் இன்றும் இந்தியாவில் விதைக்கப்படுகிறது. வெறுப்பு பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘காஷ்மீர் பைல்ஸ்’ ஆகட்டும், ‘துரந்தர்’ ஆகட்டும் இந்தியா முழுக்க இப்படி ஒரு வெறுப்பை பரப்பக்கூடிய பெரிய சூழலில், வெறுப்புக்கு எதிராக கலையைக் கையில் வைத்திருக்கும் இயக்குநர்கள் இந்திய இயக்குநர்கள் மட்டும்தான் என்பதை ஆணித்தரமாக நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ், ராஜூ முருகன் வரைக்கும் இந்தியாவில் இருக்கும் மொத்த சினிமாவின் வழியாக எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்தியா முழுக்க ஆயுதமும் இரத்தமும் வெறுப்பும் ஏதேதோ காரணத்திற்காக கக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. படங்கள் மூலமாக அதனை எதிர்க்க வேண்டிய சூழலில் `வெறுப்பின் கொட்டம் வீழ்க, அன்பு அறமென எழுக' எனச் சொல்லும் படமாகத்தான் சோமீயின் `நீளிரா'வைப் பார்க்கிறேன். இப்படத்தைப் பார்க்கச் செல்லும் முன் என் மகன் `போர் வந்துவிடுமா? மறுபடி லாக் டவுன் வந்துவிடுமா?' எனக் கேட்டான். என் மனைவி, ‘சினிமா எல்லாம் இருக்குமா? மொத்தமாக மூடிவிடுவார்களா?’ எனக் கேட்டார். அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தேர்தலுக்குப் பிறகு நாம் கடுமையான சூழலைச் சந்திக்க இருக்கிறோம். போரின் மொத்த சூழலும், நம் ஊருக்குள், நம் வீட்டுக்குள் வரப்போகிறது. அது தவிர்க்கவே முடியாததாக இருக்கும்.

போர்க் கதைகளை ரத்தம் தெறிக்க, துப்பாக்கி வெடிக்க கேட்டுக் கொண்டிருந்த சூழலில், இரத்தம் இல்லாமல் ஒரு மரணம்கூட இல்லாமல் சோமீதீரன் படத்தை எடுத்த விதம் கலையின் தீவிரத்தன்மையைக் காட்டுகிறது. இந்தப் படத்தை ஏன் நேசிக்கிறேன் என்றால், எதுவும் இல்லாமல் ஒரு கலையை முன்வைக்க முடியும் எனக் காட்டி இருக்கிறார். ஒரு மரணம் நிகழக் கூடாது என்பதை முன்வைக்கும்போது, இவன் பெரிய ஆள் என தோன்றியது. இப்படத்தின் இறுதியில் இந்திய ராணுவத்தின் தலைவன், மன்னிப்பு கேட்பான். `போர் நடக்கும் எல்லா இடங்களிலும் போய் இப்படி மன்னிப்பு கேட்கப் போகிறீர்களா?' என்ற கேள்வி வரும். அது எதேச்சதிகாரத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்வி" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com