நம்பியாரிடம் அடி வாங்க மறுத்த கதாநாயகன்

‘நான் பேண்ட் சட்டையுடன் என்னுடைய 13-வது வயதிலேயே நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் போய்ச் சேர்ந்தவன். ஏழு வயதில் சேர்ந்திருந்தால் உருப்படியாக முன்னேறியிருக்கலாம்.
நம்பியாரிடம் அடி வாங்க மறுத்த கதாநாயகன்
Published on

ஒருவேளை தொடர்ந்து பள்ளியில் படித்திருந்தால் நல்ல நிலைக்கு வந்திருப்பேன். ஆனால் இப்போது நான் இருக்கிற அளவுக்கு வந்திருக்க முடியுமாங்கிறது தான் சந்தேகம் என்று, சங்கீத விமர்சகர் வாமணனுக்கு அளித்த ஒரு பேட்டியில் குறிப்பட்டிருக்கிறார், எம்.என்.நம்பியார்.

நம்பியார் சாமி நடித்த படங்களில் நான் பார்த்த முதல் படம் தெய்வமே துணை. 1960-ம் ஆண்டு திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள வடமதுரை என்ற ஊரில் இருந்த நியூசக்தி டாக்கீஸ் என்கிற டூரிங் தியேட்டரில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன்.

அதன்பிறகு அவர் நடித்தப் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடன் மூன்று படங்களில் நடித்தும் இருக்கிறேன். 1968-ம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதரின் சொந்தப்படமான சிவந்தமண் படப்பிடிப்பில் தான் நம்பியார் சாமியை நான் முதன் முதலில் பார்த்தேன். அந்தப் படத்தை இந்தியிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் ஸ்ரீதர் இயக்கிக் கொண்டிருந்தார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒருநாள், சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு முன்பாக நடந்தது. இந்தி, தமிழ் இரண்டு மொழிப்படங்களிலும் நடிக்கின்ற நடிகர், நடிகைகள் அனைவரும் அங்குக் குழுமி இருந்தனர். நான் அப்பொழுது எழும்பூரில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று எங்களுக்கு விடுமுறை நாள். எனவே, ராஜாஜி ஹாலில் ஷூட்டிங் நடக்கிற விஷயம் கேள்விப்பட்டவுடன், மாணவர்கள் அனைவரும் அங்கு படையெடுத்தோம். அன்று எடுக்கப்பட்ட காட்சியில் சிவாஜி அண்ணன் மற்றும் முத்துராமனுடன் நம்பியார் சாமியும் நடித்துக் கொண்டிருந்தார்.

நான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தப் பிறகு படப்பிடிப்புகளிலும், பல விழாக்களிலும் அவரை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ மனிதர்கள், நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள் போன்றவர்களை நேரில் சந்திக்கும் பொழுது, அவர்களை மிகவும் மதிப்போம்; வணங்குவோம். ஆனால் நம்பியார் சாமியைப் பார்க்கும் போது மட்டும், எனக்குள் ஒருவித பயம் கலந்த, பக்தியுடன் கூடிய மரியாதை ஏற்படும். அந்த அளவிற்கு அவர் உயர்ந்த உள்ளம் கொண்டவராக இருந்தார். சிறந்த பண்பாளர், ஒழுக்க சீலர், நேர்மையாளர், சுயமரியாதையுடையவர். தனக்காக எந்த உதவியையும் கடைசி வரை யாரிடமும் சென்று கேட்டதில்லை. அவரிடம் எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையோடு மனம்விட்டுப் பேசலாம்.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிற காலங்களில் இரண்டு வேளை சாப்பிடவில்லையென்றாலும், எவ்வளவு களைப்படைத்திருந்தாலும், சரியாகத்தூங்கவில்லை என்றாலும், உடல் நிலைசரியில்லை என்றாலும், வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். அவருடைய முகத்திலும் நாம் அதைக்கண்டுபிடிக்க முடியாது. வெளிப்படையாக அதைப்பற்றி யாரிடமும் எதுவும் சொல்லமாட்டார் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு பேட்டியில் நம்பியார் சாமியைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

கவிஞர் புரட்சிதாசன், சொந்தமாக ஒரு படம் தயாரித்து, அவரே அந்தப்படத்தை இயக்கவும் செய்தார். அவருடைய மகன்தான் அந்தப் படத்தின் கதாநாயகன். அந்தப்படத்தில் நம்பியார் சாமியும் நடித்தார். எனக்கு ஜோடியாக நடிகை சுஜாதா நடித்தார். நம்பியார் சாமியுடன் ஒரு சண்டைக்காட்சியில் நான் நடித்தேன். அப்பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னக் காரணமோ அந்தப்படம் வெளிவரவே இல்லை.

1987-ம் ஆண்டு கே.கே. நகரில் உள்ள ராமசாமி சாலையில் ஒரு வீடு கட்டினேன். அந்த வீட்டில் தொடர்ந்து 6 ஆண்டுகள் ஷூட்டிங் நடைபெற்றது. முதல் ஷூட்டிங்கை ஆரம்பித்து வைத்தவர், தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜி. நான் நடித்த அவரது சொந்த படமான மக்கள் என் பக்கம் படம் தான், அந்த வீட்டில் நடந்த முதல் படப்பிடிப்பு. பாலாஜி முதன் முதலாக ஆரம்பித்து வைத்தது எனக்கு நல்ல ராசியாக இருந்தது. தொடர்ந்து அங்கு நிறைய படப்பிடிப்புகள் நடைபெற்றன.

ஒருநாள் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த படத்தில் நடிப்பதற்காக நம்பியார் சாமியும் என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். அந்தப் படத்தின் கதாநாயகன், அன்றைக்கு பிரபலமான ஒரு நடிகர்.

அன்று எடுக்க வேண்டிய காட்சிப்படி, நம்பியார் சாமி அந்த கதாநாயகனை அடிக்க வேண்டும். அந்தக் காட்சியைப் பற்றி கதாநாயகனுக்கு இயக்குனர் விளக்கினார். அதைக் கேட்ட அந்த கதாநாயகன், என்னை நம்பியார் சாமி அடித்தால், என்னுடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற கருத்தை இயக்குனரிடம் முன் வைத்தார்.

இயக்குனருக்கு அதைக்கேட்டு என்ன செய்வதன்றே விளங்கவில்லை. சிறிது நேரம் இருவருக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. இது எப்படியோ நம்பியார் சாமியின் காதுக்கு எட்டிவிட்டது.

இதற்கிடையில் இயக்குனர் நேரடியாக நம்பியார் சாமியிடம் போய் நீங்கள் கதாநாயகனை அடிப்பது போல் காட்சி இல்லை என்று மழுப்பி வேறு ஒரு காட்சியை விளக்கினார். இதைப் புரிந்து கொண்ட நம்பியார் சாமி அவர் யார்? அவர் பெயர் என்ன? அவர் இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்? என்று ஒன்றுமே தெரியாதவர் போல் கேள்விக்கணைகளைப் போட்டுத் துளைத்துவிட்டார்.

அருகிலிருந்த எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

காரணம்.. எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை, நம்பியார் சவுக்கால் அடித்து புரட்டி எடுப்பார். இது அந்த கதாநாயகனுக்குத் தெரியாதா?, இல்லை மறந்துவிட்டாரா? என்று பல கேள்விகள் என் மனதிற்குள் எழுந்தது.

அந்த சமயத்தில் அந்த நடிகரின் சில படங்கள் நன்றாக ஓடியிருந்தது. ஓடியதற்கு முழுக்காரணம் அவர்தான் என்று அவர் எண்ணிஇருக்கலாம். அது மட்டுமின்றி சுயமதிப்பு என்று ஒருகாலக்கட்டம் எல்லோருடைய வாழ்க்கையிலும் வரும். சுய மதிப்பீட்டை பெரும்பாலானோர் சரியாகக் கணிக்க முடியாது. அந்த கட்டத்தில் தான் பெரும்பாலானோர் தவறு செய்வார்கள். தன்னைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக்கொண்டு நடந்துகொள்வார்கள். இப்படிப்பட்டவர்களைப் பற்றி எம்.ஜி.ஆர். தன்னிலை உணராதவர்கள் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

அந்த கதாநாயகன் இன்றும் இருக்கிறார். ஒருசில படங்களில் வயதுக்கு ஏற்ற வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நிறையப் படங்களில் நடிக்கவில்லை. அவரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அன்று அவர் நடந்துகொண்டதுதான் நினைவிற்கு வரும்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சொந்தப்படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக நம்பியார் சாமி ஜப்பான் நாட்டிற்கு வர மறுத்து விட்டார். எனவே சத்யா ஸ்டூடியோவில், ஜப்பானில் உள்ள புத்த மடாலயம் போல செட்டை போட்டு, நம்பியார் சாமியுடன் ஒரு சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆர். நடித்தார். ஆனால், அந்தக் காட்சியை பார்த்த ரசிகர்கள், அது உண்மையிலேயே ஜப்பானில் தான் எடுத்திருப்பதாகவே நம்பினார்கள்.

நிலைமை இப்படி இருக்கும் பொழுது அன்று அந்தக் கதாநாயகன் நம்பியார் சாமியிடம் அடி வாங்குவது போல நடித்தால் தன்னுடைய இமேஜ் போய்விடும் என்று சொன்னது எவ்வளவு வேடிக்கையானது என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்பு தான் வரும்.

நம்பியார் சாமி கேரளாவில் கண்ணனூருக்கு அருகே உள்ள பெருவம்மூர் என்ற ஊரில் 1919-ம் ஆண்டு பிறந்தார் என்பது என்னுடைய நினைவு. அவர் ஆயுட்காலத்தில் சொந்த ஊரில் அதிகம் இருந்ததில்லை.

நம்பியார் சாமியின் அப்பா பெயர் கேளு நம்பியார். தாயார் பெயர் லட்சுமி. இவர் ஊட்டியில் சர்வே டிப்பார்ட்மெண்டில் வேலை பார்த்தார். எனவேதான் நம்பியார் சாமி சிறு வயதில் ஊட்டியில் படித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 1000 படங்களுக்கும் மேல் நடித்தார்.

எல்லா நடிகர், நடிகைகளையும் அவர் விரும்பினாலும், பாராட்டினாலும், தனிப்பட்ட முறையில் மூன்று பேர்களை மட்டும் அவர் உயர்வாக குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, நடிகை சாவித்திரி மூன்று பேர்களும் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய திறமைசாலிகள் என்று கூறினார்.

அவருடைய வாழ்க்கையில் 50 ஆண்டுகளில் 65 முறை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அவருடைய பக்தர்கள் அவரை மகா குருசாமி என்று தான் அழைத்தார்கள்.

7.3.1919-ம் ஆண்டு பிறந்து தன்னுடைய 89-வது வயதில் 19.11.2008-ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். எந்த ஐயப்பனை தன்னுடைய வாழ்நாளெல்லாம் வணங்கி வந்தாரோ, அந்த ஐயப்பனுக்கு மாலை அணிந்திருந்த காலத்திலேயே அவர் மரணத்தைத் தழுவினார். சாமி ஐயப்பன் அவரை அழைத்துக் கொண்டார் என்று அவருடைய பக்தர்கள் அப்போது பேசிக் கொண்டார்கள்.

சென்னையிலே அதிக ஆண்டுகள் வாழ்ந்து சொன்னையிலேயே மரணமடைந்தார். அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். நம்பியார் சாமியைப்போல் ஓர் தன்மானம் மிகுந்த மனிதரை, எதிர்காலத்தில் நம்மால் பார்க்க முடியுமா? என்ற கேள்விக்குறியுடன், அவரது உடலருகே வெகு நேரம் வரை நின்றிருந்தேன்.

- தெடரும்

நம்பியாரும்.. நானும்..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com