கதை கேட்டு தூங்கிய விவகாரம்: பழைய சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அஷ்வின்

பட விழாவில் கலந்துகொண்ட நடிகர் அஷ்வினிடம், ‘இப்போதும் கதை கேட்கும்போது நீங்கள் தூங்குகிறீர்களா?' என்று கேட்கப்பட்டது.
சென்னை,
சினிமாவில் ஓரிரு படங்களில் தலைகாட்டிய அஷ்வின், ‘என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த பட விழாவில், ‘எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. கதை கேட்கும்போது, அந்தக்கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதற்கு முன்பாக 40 கதைகள் கேட்டு தூங்கிவிட்டேன். இந்த கதையில் தான் நான் தூங்கவில்லை' என்று அஷ்வின் பேசியது சர்ச்சையானது. அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கடந்த நிலையில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த பட விழாவில் கலந்துகொண்ட அவரிடம், ‘இப்போதும் கதை கேட்கும்போது நீங்கள் தூங்குகிறீர்களா?' என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அஷ்வின்குமார், “40 என்பது பொதுவாக சொன்ன ஒரு நம்பர். நான் அதற்கு மேலும் கேட்டிருக்கலாம், கம்மியாகவும் கேட்டிருக்கலாம். தியேட்டரில் கூட படம் பார்க்கும்போது பலர் தூங்குகிறார்கள். இதுகுறித்து நான் விளக்கம் அளித்தபோதும், அடிக்கடி இப்படி கேட்பது தான் மனதை குத்தி காயப்படுத்துகிறது'' என்று வேதனை தெரிவித்தார்.






