வேர்களைத் தேடி வந்த பயணம் மனநிறைவைத் தருகிறது: இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்வு

இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் தான் பயின்ற பள்ளிக்கு சென்று பெஞ்சில் அமர்ந்து, சிறிது நேரம் தனது பள்ளிப் பருவ நினைவுகளை அசைபோட்டவர், கரும்பலகையில் "நீங்கா நினைவுகளுடன்" என எழுதி கையெழுத்திட்டார்.
வேர்களைத் தேடி வந்த பயணம் மனநிறைவைத் தருகிறது: இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்வு
Published on

பரியேறும் பெருமாள், மாமன்னன், வாழை மற்றும் சமீபத்திய பைசன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ், தான் பயின்ற தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளிக்கு திடீர் வருகை தந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மாரி செல்வராஜ் தான் படித்த பள்ளியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது காரில் பள்ளிக்கு வருகை தந்தார். அவர் பயின்ற காலத்தில் இப்பள்ளி சுப்பையா வித்யாலயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கு வந்த அவரை, தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

பள்ளி வளாகத்திற்குள் மிகுந்த ஆர்வத்துடன் சென்ற இயக்குநர், தான் அமர்ந்து பாடம் கவனித்த பழைய வகுப்பறைக்குச் சென்றார். அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து சிறிது நேரம் தனது பள்ளிப் பருவ நினைவுகளை அசைபோட்டவர், கரும்பலகையில் "நீங்கா நினைவுகளுடன்" என உருக்கமாக எழுதி கையெழுத்திட்டார். குறிப்பாக, தனக்கு கணிதம் போதித்த மறைந்த ஆசிரியர் தெய்வ முருகன் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

பின்னர் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்ற மாரி செல்வராஜ், அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த முன்னாள் தலைமை ஆசிரியர்களின் புகைப்படங்களைப் பார்வையிட்டார். தான் பயின்ற காலத்தில் தலைமை ஆசிரியராக இருந்த ராஜகோபால் அவர்களைப் பற்றி விசாரித்தபோது, அவர் கொரோனா காலத்தில் மறைந்துவிட்டதாகத் தற்போதைய தலைமை ஆசிரியர் தெரிவித்தார். இதைக் கேட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் மிகுந்த மனவருத்தத்துடன் கண்கலங்கினார்.

பள்ளிப் பருவ அனுபவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆசிரியரின் அடி: "பள்ளியில் படிக்கும்போது நிறைய முறை ஆசிரியர்களிடம் அடி வாங்கி இருக்கிறேன். அவை இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன."

சினிமா ஆர்வம்: "விடுதியில் தங்கிப் படித்தபோது, இரவில் நண்பர்களுடன் திருட்டுத்தனமாகத் திரைப்படங்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது ஆசிரியர்களிடம் சிக்கித் தண்டிப்பு அனுபவித்திருக்கிறேன்."

நண்பர்கள்: தனது பள்ளித் தோழர்களான ரமேஷ், சந்தானம் ஆகியோரை நினைவு கூர்ந்தார். தற்போது அவர்களுடன் தொடர்பு இல்லை என்றாலும், அவர்களின் நட்பு இன்றும் இதயத்திற்கு நெருக்கமானது என்றார். இறுதியாக, பள்ளி வளாகத்தில் முன்பு விடுதி இருந்த இடத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்த இயக்குநர், தனது வேர்களைத் தேடி வந்த இந்த பயணம் மிகுந்த மனநிறைவைத் தருவதாகக் கூறி விடைபெற்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com