

மும்பை,
‘தி கேரளா ஸ்டோரி’ 2023ஆம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி சர்ச்சைகளுக்கு இடையிலும் வசூல் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக ‘கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார்.
படத்தின் முன்னோட்டக் காணொளியில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய கோரி கேரள ஐகோட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கலை வெளிப்பாட்டில் பொதுவாக தலையிடுவதில்லை என்றாலும், மாநிலத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகக் குறிப்பிட்டது.
மேலும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும் என தெரிவித்த நீதிமன்றம், அனைத்து வழக்குகளும் முடியும் வரை இரு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. சமூக வலைதளங்களில் இருந்து முன்னோட்டக் காணொளியை நீக்கவும் உத்தரவிட்டது.
இதற்கிடையில், வெளியீட்டைத் தடை செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர்கள் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற அமர்வு, இருதரப்பினரின் வாதங்களை கேட்ட பின், வெளியீடு தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை தற்காலிகமாக ஒத்திவைத்தது.
இந்த நிலையில், தி கேரளா ஸ்டோரி 2 படத்தின் தாயரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா அளித்த பேட்டியில், "தி கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் கேரள மக்களுக்கு எதிரானது அல்ல. கேரளம் இறைவன் நேசிக்கும் நிலம். தவறுகளை திருத்துவது எங்கள் பொறுப்பு. இப்படம் கேரள மக்களை எதிர்மறையாக சித்தரிப்பதல்ல. இப்படம் சில குற்றவாளிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இடைக்கால தடையை நீக்கிய நீதிபதிகளுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.