

"ரசிகர்களின் அன்பால் ஒவ்வொரு நாளும் பூரித்துப்போயிருக்கிறேன். அந்த அன்புதான் எனக்கு எப்போதும் பிரகாசத்தைக் கொடுக்கிறது. வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களைக் கடந்து வருவதற்கும் ரசிகர்கள் காட்டும் அன்பும், பாசமும்தான் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன." என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
உலக அழகி பட்டம் வென்று திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தனது அழகு, நடிப்புத் திறமை ஆகியவற்றால் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஜீன்ஸ்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து 'எந்திரன்', 'ராவணன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து பெரும் கவனம் ஈர்த்தார்.
இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய், திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், ஐஸ்வர்யா ராய் நேற்று தனது 53-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தனக்குக் கிடைத்துவரும் ரசிகர்களின் அன்பு குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது: "ரசிகர்களின் அன்பால் ஒவ்வொரு நாளும் பூரித்துப்போயிருக்கிறேன். அந்த அன்புதான் எனக்கு எப்போதும் பிரகாசத்தைக் கொடுக்கிறது. வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களைக் கடந்து வருவதற்கும் ரசிகர்கள் காட்டும் அன்பும், பாசமும்தான் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.இத்தகைய அன்பைப் பெறுவதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.