"திரவுபதி-2" சினிமா தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் தலையிட முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


திரவுபதி-2 சினிமா தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் தலையிட முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிவிட்டதால் கோர்ட்டு தலையிட முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மகாமுனி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- திருவண்ணாமலையை தலைமை இடமாக கொண்டு 14-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னன் வீரவல்லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் "திரவுபதி- 2" சினிமா படம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது. வீரவல்லாள தேவன் என்பவர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்கு பல கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

"திரவுபதி -2" படத்தில் வீரவல்லாள தேவனை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக டைரக்டர் மோகன் சித்தரித்து உள்ளார். இந்த சினிமாவின் சுவரொட்டிகளில் வீர வல்லாள தேவன் என்பதை வீரவல்லாளன் என்று மட்டும் குறிப்பிட்டு உள்ளனர். இது உள்நோக்கம் கொண்டது. இந்த படத்துக்கு அவசரம் அவசரமாக யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது. இந்த சான்றிதழை வாபஸ் பெறுமாறு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே "திரவுபதி- 2" படத்தை தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்யவும், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளை திருத்தம் செய்யும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிவிட்டதால் கோர்ட்டு தலையிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story