"நடிகைகளை சுலபமாக தொடலாம் என்ற மனநிலை சரியல்ல" - நித்யா மேனன்

நடிகைகளை சுலபமாக தொட்டுவிட, நாங்கள் என்ன பொம்மைகளா என்று நித்யா மேனன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர், நடிகை நித்யா மேனன். இவர் 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இதில் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் தனுஷூடன் 'இட்லி கடை' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு விஜய்சேதுபதியுடன் 'தலைவன் தலைவி' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தின் சிறிய கிளிப்ஸ் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
நித்யா மேனன் தன்னுடைய கருத்துக்களை தெளிவாக, அதே சமயம் ஆணித்தரமாக முன்வைப்பதில் எப்போதும் தயக்கம் காட்டியதில்லை. அப்படித்தான் சமீபத்தில் அளித்த பேட்டியிலும் தன்னுடைய கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். அதில், "பெரும்பாலான ஆண்கள், ஒரு சாதாரண பெண்ணிடம் எப்படி நடந்துகொள்கிறார்களோ, அப்படி நடிகைகளிடம் நடந்துகொள்வதில்லை. நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால், ரசிகர்கள் பலரும் எங்களிடம் கைகொடுக்கவும், ஒட்டி உரசி நின்று புகைப்படம் எடுக்கவும் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அவர்கள் ஒரு சாதாரண பெண்ணிடம் முன்வைப்பதில்லை. நடிகை என்றால் ஈசியாக தொட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி சுலபமாக தொட்டுவிட, நாங்கள் என்ன பொம்மைகளா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.






