‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ டீசர் இசை அற்புதம்.. இசையமைப்பாளரை பாராட்டிய விஜய் சேதுபதி

படத்தின் டீசர் இசை மிகவும் அழகாக இருந்தது என இசையமைப்பாளர் ஹர்ஷவர்தனை மனதார பாராட்டினார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி
Published on

நடிகர் விஜய் சேதுபதி, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம், மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது.

பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் நடிகைகள் தபு, சம்யுக்தா மேனன், நிவேதா தாமஸ் மற்றும் நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, படத்தின் டீசருக்காக இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் குறித்து பாராட்டிப் பேசினார்.

"காத்திருக்க வைக்காமல் இசை கொடுத்தார்"

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “'ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு' படத்தின் டீசர் இசை மிகவும் அழகாக இருந்தது. அதற்காக ஹர்ஷவர்தனை மனதார பாராட்டுகிறேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றால் இசை வருவதற்கு தாமதமாகும், கடைசி நேரத்தில்தான் கிடைக்கும், அதுவரை காத்திருக்க வேண்டும் என்ற ஒரு நடைமுறை உள்ளது. ஆனால் ஹர்ஷவர்தன் அப்படியில்லாமல், எந்த தாமதமும் இல்லாமல் சிறப்பான இசையை வழங்கியுள்ளார். அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார்.

விஜய் சேதுபதியின் இந்தப் பாராட்டு, படத்தின் இசை மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com