ஓய்வெடுத்த தேனிசைத் தென்றல் தேவாவின் இசை பயணம்

கானா, குத்துப் பாடல்கள், காதல் பாடல்கள் என அனைத்து வகை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் தேவா.
தேனிசைத் தென்றல் தேவாவின் இசை பயணம்
Published on: 

சென்னை,

தமிழ்த் திரையுலகின் 'தேனிசைத் தென்றல்' என போற்றப்பட்ட இசையமைப்பாளர் தேவா (76) உடல்நலக்குறைவால் காலமானார்.தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என மொத்தமாக 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கானா, குத்துப் பாடல்கள், காதல் பாடல்கள் என அனைத்து வகை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் தேவா.

தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா, தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர்.

'மனசுக்கேத்த மகாராசா'

கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த 'மனசுக்கேத்த மகாராசா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான தேவா பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 90களில் இளையராஜா ஒருபுறம், ஏ.ஆர் ரஹ்மான் மறுபுறம் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் தேவாவின் பாடல்களுக்குத் தனித்த ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

தேவாவின் இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். 1950-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் சொக்கலிங்கம், கிருஷ்ணவேணி. குடும்பத்தின் பூர்வீகம் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள மாங்காடு கிராமம்.

சிறுவயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட தேவா, இசையமைப்பாளர் சந்திரபோஸுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் ஜே.பி.கிருஷ்ணாவிடம் இந்திய இசையையும், மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையையும் கற்றுக்கொண்டார்.

* திரைப்படத்துக்கு வருவதற்கு முன்பே சென்னை தொலைக்காட்சியில் பாடல்களுக்கு தேவா இசை அமைத்துள்ளார்

* 1989ஆம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகராசா திரைப்படம் மூலம் திரையுலகில் தேவா அடியெடுத்து வைத்தார்.

* சென்னையின் பெருமைக்குரிய கானா பாடல்களை உலகறியச் செய்தவர் தேவா

* இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த தேவா, பல கானா பாடல்களை எழுதி அவரே இசையமைத்து பாடியுள்ளார்.

* 1990-ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருது, 1992-ல் கலைமாமணி விருதை பெற்றவர் தேவா

கானா பாடல்கள், மெலடி பாடல்கள், பின்னணி இசை, ஹீரோ அறிமுகப் பாடல்கள் எனப் பல ஜானர்களில் அவர் தடம் பதித்துள்ளார். அவர் தனது திரைப்படங்கள் மட்டுமல்லாது பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

திறமையை வளர்த்துக்கொண்ட தேவா

தேவாவின் இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். திரையுலகில் நுழைவதற்கு முன்பு இசைக்குழுக்களுடன் பணியாற்றிய அவர், ஹார்மோனியம், பியானோ உள்ளிட்ட இசைக்கருவிகளைக் கற்றுத் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.

ஆரம்பகாலப் போராட்டங்களுக்குப் பிறகு முதன் முதலாக 1989-ல் வெளியான 'மனசுக்கேத்த மகராசா' திரைப்படம் அவரது இசைப் பயணத்தில் முக்கிய இடத்தைப் பெற்று தந்தது.

திரையிசைப் பயணத்தில் திருப்புமுனை

1990-ம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ தேவாவின் திரையிசைப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. பிரசாந்த் அறிமுகமான இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. கிராமிய இசையின் மணம் மாறாமல், எளிமையான மெட்டுகளைக் கொண்டு பாடல்களை உருவாக்கியிருந்தார் தேவா.

‘சின்னப் பொண்ணுதான் வெட்கப்படுது’, ‘தண்ணி குடம் எடுத்து’ போன்ற பாடல்கள் தமிழகத்தின் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒலித்தன.

இளையராஜா தமிழ்த் திரையிசையில் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்த காலத்தில், தேவா தனக்கென ஒரு இசைப் பாதையை உருவாக்கத் தொடங்கினார்.

அடுத்த சில ஆண்டுகளில் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு அவரது பணிகள் அதிகரித்தன. 1996-ம் ஆண்டில் மட்டும் 36 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரை தாங்கிவரும் பிஜிஎம்-ஐ உருவாக்கியவர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரை தாங்கிவரும் BGM-ஐ உருவாக்கியவர் இசையமைப்பாளர் தேவா

ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா,அருணாச்சலம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர்.

ரஜினி, கமல் படங்களில் தனி முத்திரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாமலை, பாட்ஷா, முத்து போன்ற திரைப்படங்களின் பாடல்கள் தேவாவின் இசைப் பயணத்தில் முக்கியமானவை. குறிப்பாக, பாட்ஷா, அண்ணாமலை, திரைப்படத்தின் இசையும் பாடல்களும் ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பெற்றுத்தந்தன.

‘நான் ஆட்டோக்காரன்’, ‘ஸ்டைலு ஸ்டைலுதான்’, ‘ரா ரா ராமையா’ போன்ற பாடல்கள் திரைப்படத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தன.

‘வந்தேண்டா பால்காரன்’, ‘கொண்டையில் தாழம்பூ’, ‘அண்ணாமலை அண்ணாமலை’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி, பஞ்சத்தந்திரம், பம்மல்.கே.சம்பந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் தேவாவின் இசை இடம்பெற்றது. வெவ்வேறு கதைகளுக்கும் நடிகர்களுக்கும் ஏற்றவாறு இசையமைத்த அவரது பாணி, அவருக்கெனத் தனித்த அடையாளத்தை தமிழ்த் திரையுலகில் உருவாக்கியது என்றே சொல்லலாம்.

விஜய், அஜித் படங்களுக்கு மெட்டு

அஜித்தின் ஆசை, காதல் கோட்டை, வாலி போன்ற படங்களிலும், விஜய்யின் நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், குஷி போன்ற படங்களிலும் தேவாவின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. காதல் மெட்டுகளிலிருந்து துள்ளலான கானா பாடல்கள் வரை, பல்வேறு இசை வடிவங்களில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

காதல் பாடல்களிலிலும் தனி முத்திரை

1995-ம் ஆண்டு அஜித் நடித்த ‘ஆசை’ திரைப்படத்தின் பாடல்கள் தேவாவின் மெல்லிசைத் திறனை வெளிப்படுத்தின.

‘மீனம்மா அதிகாலையிலும்’, ‘புல்வெளி புல்வெளி’ போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.

1996-ம் ஆண்டு வெளியான ‘காதல் கோட்டை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நலம் நலமறிய ஆவல்’ பாடல், காதலை மென்மையாக வெளிப்படுத்திய பாடல்களில் ஒன்றாக அமைந்தது.

1999-ம் ஆண்டு வெளியான ‘வாலி’ திரைப்படத்தில் ‘ஓ சோனா’, ‘ஏப்ரல் மாதத்தில்’ போன்ற பாடல்கள் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமுடன்’, ‘குஷி’ உள்ளிட்ட படங்களில் தேவா இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

2000-ம் ஆண்டு வெளியான ‘குஷி’ திரைப்படம் தேவாவின் இசைத் திறனை மற்றொரு கோணத்தில் வெளிப்படுத்தியது.

‘மேகம் கருக்குது’, ‘ஒரு பொண்ணு ஒண்ணு’, ‘மொட்டு ஒன்று மலர்ந்திட’ போன்ற பாடல்கள் திரைப்படத்தின் காதல் சூழலுக்கு ஏற்ப அமைந்திருந்தன.

ரசிகர்கள் வாய்களில் முனுமுனுக்கும் பாடல் வரிகள்...

* 'கந்தன் இருக்கும் இடம் கந்த கோட்டம் என் காதலி இருக்கும் இடம் வனத்தோட்டம்...'

* 'உதயம் தேட்டருல என் இதயத்த தொலைச்சேன்...'

* 'கவலை படாதே சகோதரா...'

போன்ற பாடல்களை GenZ-களும் விரும்பிக் கேட்கக் கூடிய பாடல்களாகவும் இருக்கின்றன.

விருதுகளை குவித்த தேவா

தேவாவுக்கு தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருதும், 1992-ல் கலைமாமணி விருதும் கிடைத்தன. கன்னடத் திரைப்படமான அம்ருத வர்ஷிணிக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றார். இசையுலகில் அவரது பங்களிப்புக்காகப் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

ஓர் இசையமைப்பாளரின் வெற்றி என்பது அவர் பெற்ற விருதுகளால் மட்டுமல்ல அவரது பாடல்கள் எத்தனை தலைமுறைகளைக் கடந்து மக்களின் நினைவில் வாழ்கின்றன என்பதை பொறுத்து அமையும் . அந்த வகையில், தேவாவின் பாடல்கள் தமிழ் ரசிகர்களின் இசை நினைவுகளில் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன. காலம் மாறினாலும், மனதில் பதிந்த மெட்டுகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். காற்றில் கலந்த தேனிசையை யாராலும் அழித்துவிட முடியாது. காலம் கடந்தாலும் அவரது இசை ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றே சொல்லலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com