என்னை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட செய்தி பொய்யானது - இயக்குநர் லிங்குசாமி


என்னை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட செய்தி பொய்யானது -  இயக்குநர் லிங்குசாமி
x

செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லிங்குசாமி. திருப்பதி பிரதர்ஸ் என்ற பேனரில் தனது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து படங்களும் தயாரித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து லிங்குசாமி படம் தயாரிக்க ரூ.35 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. மாறாக அந்த தனியார் நிறுவனத்திற்கு லிங்குசாமி நிறுவனம் கொடுத்த செக் வங்கியில் பணமின்றி திரும்பி வந்தது.

இதையடுத்து தங்களுக்கு தர வேண்டிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.48.68 லட்சம் தர வேண்டும் என தனியார் நிறுவனம் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பான வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் கடனாக பெற்ற தொகையை இரு மாதத்திற்குள் திருப்பி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதுக்கு மறுப்பு தெரிவித்து லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “காசோலை வழக்கில் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர். நாங்கள் மேல்முறையீடு செய்ய 30 நாள் கால அவகாசம் வழங்கி உள்ளனர். நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை” என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story