அடுத்த எம்.ஜி.ஆர் விஜய்தான் - நடிகர் தம்பி ராமையா

விஜய்க்கு ஆதரவு கொடுத்து அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வையுங்கள் என்று நடிகர் தம்பிராமையா அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அடுத்த எம்.ஜி.ஆர் விஜய்தான்  - நடிகர் தம்பி ராமையா
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று முன்தினம் மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

தொடர்ந்து நேற்றும் கவர்னரை விஜய் சந்தித்திருந்தார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு எண்ணுடன் தன்னை வந்து சந்திக்குமாறு கவர்னர் கூறியிருந்தார் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறுவதற்கு வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. இது குறித்து முடிவு செய்ய சம்பந்தப்பட்ட கட்சியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜயை அடுத்த எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிட்டுள்ள நடிகர் தம்பி ராமையா, ஆளுநர் உடனடியாக அழைத்து அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் தம்பி ராமையா, “கேரள ஆளுநர், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் அய்யா அர்லேகர் பாதம் தொட்டு நான் வணங்குகிறேன். நான் எந்தக் கட்சியையும் சாதராதவன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீது மட்டும் பக்தி கொண்டவன். தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில் 40 சதவீத ஓட்டை இளைய தளபதி விஜய் வாங்கி இருக்கிறார். 2 கோடி பேர் ஓட்டு போட்டுள்ளார்கள். ஓட்டு உரிமை அற்ற மாணவர்கள், மாணவிகள் எனது பேரன்கள் பேத்திகள் எல்லோருடைய குடுமபத்தில் உள்ளவர்களின் ஆசையும் அபிலாஷையும் அதில் ஒளிந்திருக்கிறது. கடந்த 2, 3 நாள் நிகழ்வு என்பது தமிழ்நாட்டில் இருக்கிற குழந்தைகளை ஓட்டு உரிமை அற்றவர்களை மனம் கலங்க செய்திருக்கிறது. எல்லோர் வீட்டிலும் ஒரே கூக் குரல். 113 இடங்களை காண்பித்து விட்டார்கள், ஐந்தை கூட தூக்கிப் போடுங்கள். 108 இருக்குல, அதனால் தம்பி விஜயை ஆட்சி அமைக்க அழையுங்கள் ஆளுநர் அய்யா. அவர் கேட்டிருக்கும் இந்த 2 வார அவகாசம் கொடுங்கள். ஆட்சி தொடரும். அவர் நிரூபிக்க முடியவில்லை என்றால், சட்டம் அவரை நீக்கும்.

தம்பி விஜய் அடுத்த எம்.ஜி.ஆர் ஆகி விட்டார். அவரை ஆளுநர் அய்யா உடனடியாக அழைத்து பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இதை குழந்தைகளின் பார்வையில் இருந்து கேட்கிறேன். விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர். இதை பாண்டிச்சேரியில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்களாக வந்து விஜய்க்கு ஆதரவு கொடுங்கள். அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வையுங்கள்” என்று நடிகர் தம்பிராமையா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com