

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. உறுப்பினர்களை எண்ணிக்கணிக்கும் நடைமுறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தவெகவின் துர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது.
இந்த நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து, மீண்டும் மாண்புமிகு முதல்வராகத் தொடரும் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தன்னுடன் இருந்தவர்கள், பணிபுரிந்தவர்கள், விசுவாசமானவர்கள், முன்பின் தெரியாதவர்கள் யாவரும்
என் மக்கள் என அனைவரையும் சமமாக அரவணைத்து வழிநடத்தும் பண்பு, திரைத்துறை முதல் இன்றுவரை அவரிடம் மாறாமல் இருந்துள்ளதை இத்தேர்தலின் மூலம் உணர முடிகிறது.
உடன் இருப்பவர்களின் உள்ளத்து மகிழ்ச்சியை ரசிக்கும் அந்தப் பெருங்குணமே முதல்வர் விஜய், அவர்களுக்கு
மேலும் பல வெற்றிகளைத் தேடித்தரும்.
"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்"
எனும் பாரதிதாசன் வரிகளையே வாழ்த்தாக அவருக்கு வழங்கி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.