"நான் அதிக கவர்ச்சியாக நடித்த ஒரே படம்.."- நடிகை மோகினி

நீச்சல் உடை காட்சியில் நடிக்க சொன்ன போது அழுது விட்டு நடிக்க மறுத்து விட்டேன் என்று நடிகை மோகினி கூறியுள்ளார்.
‘வா வா அன்பே பூஜை உண்டு...’ இந்த பாடலையும் சரி, பாடலில் நடித்த மோகினியையும் சரி யாரும் மறந்திட முடியாது. ‘ஈரமான ரோஜாவே’ படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வருகிறது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த மோகினி, பரத் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். திருமணத்திற்கு பிறகு அவருக்கு சினிமாவில் இடைவெளி ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மோகினி அளித்த பேட்டியில், கண்மணி படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு வற்புறுத்தப்பட்டேன்.
படத்தில் நீச்சல் உடை காட்சியில் நடிக்க சொன்ன போது நான் அழுது விட்டு அதில் நடிக்க மறுத்து விட்டேன். அதனால் படப்பிடிப்பு பாதி நாள் நிறுத்தப்பட்டது. எனக்கு நீச்சல் கூட தெரியாது என விளக்க முயன்றேன். ஆண் பயிற்சியாளர்கள் முன்னிலையில் அரைகுறை ஆடைகளுடன் நான் எப்படி கற்றுக் கொள்ள முடியும். எனவே அதை செய்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. உடல் தழுவா பாடலுக்காக அந்த காட்சியை நான் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன். பின்னர் அவர்கள் கேட்டதை நடித்து கொடுத்தேன். அதே காட்சியை ஊட்டியில் படமாக்க வேண்டும் என்று சொன்ன போது நான் மறுத்து விட்டேன். படப்பிடிப்பு தொடராது என அவர்கள் என்னிடம் சொன்ன போது, அது உங்கள் பிரச்சினை. என்னுடையது அல்ல என கூறினேன். எனவே எனது சம்மதம் இல்லாமல் நான் அதிகமாக கவர்ச்சியாக நடித்த ஒரே படம் கண்மணி.
இவ்வாறு அவர் கூறினார்.






