வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பு வாழ்க்கையை மாற்றியது... மனம் திறந்த ஜெய்கிருஷ்ணா

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் வந்த ஜெய்கிருஷ்ணா காலச்சூழல் காரணமாக நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பு வாழ்க்கையை மாற்றியது... மனம் திறந்த ஜெய்கிருஷ்ணா
Published on

'அசுரன்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய்கிருஷ்ணா (ஜே.கே.), தொடர்ந்து 'சாணிக்காயிதம்', 'கேப்டன் மில்லர்', 'லால் சலாம்', 'வா வாத்தியார்', 'கர', 'கருப்பு', 'பிளாஸ்ட்' உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'லிங்கம்' இணையத் தொடரிலும் அவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றது.

உதவி இயக்குநராக தொடங்கிய பயணம்

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் வந்த ஜெய்கிருஷ்ணா, பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். பின்னர் விஜய் சேதுபதி நடித்த 'வன்மம்' திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். ஆனால் காலச்சூழல் காரணமாக இயக்குநர் பயணம் தொடர முடியாத நிலையில், நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

'அசுரன்' கொடுத்த திருப்புமுனை

இதுகுறித்து ஜெய்கிருஷ்ணா கூறுகையில், "ஒரு படத்தை இயக்கிய பிறகு சில சூழ்நிலைகளால் அமைதியாக இருந்தேன். அப்போது நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. நண்பர் ஒருவரின் மூலம் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்து 'அசுரன்' படத்திற்காக ஆடிஷனில் பங்கேற்றேன். அந்த படத்தில் தமிழின் தந்தையாக நடித்தேன். 'அசுரன்' திரைப்படம்தான் என் வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தை கொடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இதுவரை சிறியதும் பெரியதுமாக 25 படங்களில் நடித்துவிட்டேன்" என்றார்.

புதிய பாதையில் என் பயணம்

மேலும் அவர், "எனது வயதுக்கும் தோற்றத்துக்கும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களே மிகவும் பொருத்தமாக இருக்கும். அதையே மையமாக வைத்து என் பயணத்தை தொடர்கிறேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். தற்போது ஒரு நடிகனாக புதிய பாதையில் என் பயணம் தொடர்ந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com