‘தி பாரடைஸ்’ பிரீமியர் காட்சி...ரசிகர்களுடன் படம் பார்க்க நானிக்கு அனுமதி கிடைக்குமா?

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படம் நாளை வெளியாகவுள்ளது.

‘தி பாரடைஸ்’ பிரீமியர் காட்சி...ரசிகர்களுடன் படம் பார்க்க நானிக்கு அனுமதி கிடைக்குமா?
Published on

ஐதராபாத்,

நடிகர் நானி, தான் நடித்துள்ள 'தி பாரடைஸ்' படத்தின் சிறப்புப் பிரீமியர் காட்சியை ஐதராபாத் ஆர்.டி.சி. எக்ஸ் ரோடு திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க அனுமதி கோரியுள்ளார்.

நானி - ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி

நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நானி–ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நானி இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

1980-களில் நடக்கும் கதை

‘தி பாரடைஸ்’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1980-களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்தில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகத்தினர், அமைப்புரீதியான அடக்குமுறைக்கு எதிராக தங்களது உரிமைகளுக்காக போராடுவதை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தசரா’ படத்தைப் போலவே இப்படத்திலும் நானியின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை திரைக்கு வருகிறது

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் தி பாரடைஸ் திரைப்படம் செப்டம்பர் 24-ந் தேதி (நாளை) வெளியாக உள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி செப்டம்பர் 23-ந் தேதி (இன்று) இரவு திரையிடப்படும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

நானிக்கு அனுமதி கிடைக்குமா?

இந்த நிலையில், நடிகர் நானி, தான் நடித்துள்ள 'தி பாரடைஸ்' படத்தின் சிறப்புப் பிரீமியர் காட்சியை ஐதராபாத் ஆர்.டி.சி. எக்ஸ் ரோடு திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க அனுமதி கோரியுள்ளார். இதற்கு பதிலளித்த தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, பாதுகாப்பு காரணங்களால், உரிய நடைமுறையைப் பின்பற்றி உள்ளூர் காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என நானி உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த 2024-ம் ஆண்டு ‘புஷ்பா 2' வெளியீட்டின்போது இதே பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com