

சென்னை,
மனுஷனை எந்த அடையாளமும் இல்லாம நேசிக்க ஆரம்பிக்கும் உலகமே சொர்க்கம். தற்காலிக வெற்றி தோல்விகளை வைத்து மனிதனை அடையாளப்படுத்தும் கலாச்சாரம் கூட அசிங்கம் தான்.. நல்லபடத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கே நான் நன்றி சொல்வேன்.. என்று சேரன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான 'டோரதி' திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள 'டோரதி', சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.
வெளியானது முதலே 'டோரதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து , ராஜு முருகன் உள்ளிட்டோரும் 'டோரதி' படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான சேரன் டோரதி படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
இதை பார்க்கும் முன்னால நீங்க நிறைய இந்த சமூகத்தை, மனிதர்களை படிக்கனும். அப்போத்தான் புரியும்.. எதுனால முதல் பகுதில அவ்வளவு வன்மம் , ரத்தம், பழிக்குப்ப்பழி, சாதிச்சண்டை, மொழிபேதம்னு.... மனித அழுக்குகளால் ஆன முதல்பாதியில் இருந்து ஏன் இரண்டாவது பகுதி முழுக்க வேற படமா இருக்கு.. இயற்கையும் தீராத காதலும் சுமந்து வீசும் தென்றலாக அவ்வளவு மென்மை, பாலினம் தாண்டிய அன்பு, பயணம், வெறுப்பையும் நேசிக்கும் பக்குவம், நீ எதுவாக வேண்டுமானலும் இரு .. நான் அன்பு காட்டுவேன் என்ற உண்மை... காட்டுக்கூச்சலால் தலைநிமிர்ந்து நிற்பதாக ஆர்ப்பரிக்கும் ஆறாவது அறிவை பயன்படுத்தாத சமூகத்துக்குள் பாலினம் அற்ற ஒரு உயிர் புல்லாங்குழலால் இசைக்கிறது.. காற்றுக்கும் துவாரத்துக்கும் நடுவில் இசை உருவாகும் அதிசயமே வாழ்க்கை என... திரைப்படத்தின் உருவாக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் பிரமிக்க வைக்கிறார்.. அவர் திரையில் எழுதிய திரைக்(புதுக்)கதைதான் எனக்கு இந்த புரிதலை சொல்லித்தந்தது...
சினிமாவில் இருக்கும் நிறையபேர் பாராட்டிய பின்னர் நான் சொல்வது சாதாரணமாக கூட இருக்கலாம்.. ஆனால் நான் இன்னும் நல்ல ரசிகன் என்பதை நான் படம் பார்த்த பின்னர் எனக்குள் ஏற்பட்ட சந்தோசம் சொன்னது... வெல்டன்.. படம் உருவாக்கத்தில் பயணித்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்... மேன்மைமிகு இளையராஜா... வெறித்தனமா பின்னனி இசை.. நீண்ட நாட்களுக்கு பின்னர் திரைக்கதையோடு சேர்ந்து எட்டா உயரத்தில் எழுந்து நின்று ஆர்ப்பரித்த இசை... பிரமிப்பின் உச்சம்.
மனுஷனை எந்த அடையாளமும் இல்லாம நேசிக்க ஆரம்பிக்கும் உலகமே சொர்க்கம். தற்காலிக வெற்றி தோல்விகளை வைத்து மனிதனை அடையாளப்படுத்தும் கலாச்சாரம் கூட அசிங்கம் தான்.. நல்லபடத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கே நான் நன்றி சொல்வேன்..
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.